பாடல் எண் :3301

வரையோடு நிகர்புரிசை வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிக "மெனக் கினி" யோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப மணித்தீப நித்திலப்பூத்
திரையோதங் கொண்டிறைஞ்சுந் திருச்சாய்க்கா டெய்தினார்
147
(இ-ள்.) வரையோடு...கழல் வணங்கி - மலையோடொத்த மதிலையுடைய திருவலம்புரத்தில் எழுந்தருளிய இறைவரது திருவடிகளை வணங்கி; உரை....போய் - சொல்லும் பொருளும் ஒத்தியையும் "எனக்கினி" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளிமேற்சென்று; சங்க நிரையோடு....கொண்டிறைஞ்சும் - சங்கு வரிசைகளாகிய வாத்தியங்களுடனே, அலைநுரைத்திவலைகளாகிய தூபத்தையும், நவமணிகளாகிய தீபத்தையும், முத்துக்களாகிய பூக்களையும், அலைகளாகிய கைகளினாற் கடல் ஏந்திக்கொண்டு வழிபாடு செய்தற்கிடமாகிய; திருச்சாய்க்காடு எய்தினார் - திருச்சாய்க்காட்டினை அணைந்தனர்.
(வி-ரை.) வரையோடு நிகர் - ஓடு - மூன்றனுருபு வரையை நிகர் என இரண்டனுருபாய் வந்தது.
உரை ஓசைப் பதிகம் - உரை - பொருள்; ஓசை - சொல்; சொல்லும் அதன் பொருளும் ஒத்தியைந்து நடக்கும் பதிகம். உரைக்கப்படும் பண்ணமைதியாகிய ஓசையினை உடைய என்றலுமாம்; இப்பொருளில் ஓசை பதிகப்பண்ணாகிய காந்தாரப் பண் குறித்தது.
பதிகம் "எனக்கினி" - ஓதி - எனக்கினி என்று தொடங்கும் பதிகம் பாடியருளி; முதற் குறிப்பு.
போய் - அத்திருப்பதியினை அகன்று மேற் சென்று;
சங்கநிரையோடு...கொண்டிறைஞ்சும் - சங்கநிரை - வாத்தியமாக; இது வழிபாட்டு முறையில் வரும் ஒரு உபசார வகை; தூபம், தீபம், பூ இவை இன்றியமையாத வேறு வகை; இன்றியமையாத உபகரணங்களின் வகையாம். ஆதலின் முன்னதனை ஓடு உருபு தந்து வேறு பிரித்துக் கூறினார்.
துமித்தூபம் - அலைநீர்த் திவலைகள் தூபப் புகையாகவும்; மணித்தீபம் - நவ - மணிகள் தீபங்களாகவும், நித்திலப்பூ - முத்துக்கள் வெண் மலர்களாகவும், திரை இவற்றை ஏந்தும் கைகளாகவும், ஓதம் - வழிபடும் அன்பராகவும் உருவகப் படுத்தினார்; இஃதே கதேசவுருவகம். சிவமயமாகிய தெய்வக்கண் கொண்டு காண்பார்க்கே இவ்வுருவக நிலை காணப்படும்; 1905 - 1907 முதலியவை பார்க்க. ஓதம் - பூசைக்குரிய நீரும் குறித்தது. "வம்பு லாமலர் நீரால்வழிபட்டு....இறைஞ்சலின்" (57) என்று காவிரிக்குச் சொல்லியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. தற்குறிப்பேற்ற அணியும் உருவகமும் விரவி வந்தது.
ஓதம் தூப தீபம் பூக்கொண்டிறைஞ்சும் - திருச்சாய்க்காடு - இப்பதி கடற்கரையில் உள்ள நிலையும் உணர்த்தப்பட்டது.