பாடல் எண் :3302

தேவர்பெரு மான்றன்னைத் திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார் வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார் நனிபள்ளித் திருநகரில்.
148
(இ-ள்.) தேவர் பெருமான் தன்னை.....பாடிப்போய் - தேவர்களுடைய பெருமானைத் திருச்சாய்க்காட்டினிலே வணங்கிப் பாக்களின் தன்மை விளங்கும் செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தினைப் பாடியருளி மேற்சென்று; மேவலர்தம்...ஏத்தி - பகைவர்களது திரிபுரங்களையும் எரித்த இறைவரது திருவெண் காட்டினை வணங்கித் துதித்து அதன் பின்பு; நாவலர் காவலர்....திருநகரில் - நாவலர் பெருமானாகிய நம்பிகள் சென்று திருநனிபள்ளித் திருநகரத்தினை அடைந்தருளினார்கள்.
(வி-ரை.) பாவலர் செந்தமிழ் மாலைத் திருப்பதிகம் - பா-அலர் - பா பாட்டின் தன்மைகள்; அலர் - விளங்கும்; இஃது இத்திருப்பதிகத்தின் தன்மை குறித்தது. இத்திருப்பதிகம் இப்போது கிடைத்திலது!
மேவலர் - பகைவர்; முப்புரவாணர்களாகிய அரக்கர்.
பணிந்தேத்தி - "படங்கொணாகம்" என்ற திருப்பதிகம் போற்றிசைத்து.
நாவலர் காவலர் - தமிழ் நாவலர் பெருமான்; திருநாவலூரார் தலைவர் என்றலுமாம்.
திருச்சாய்க்காடு - நம்பிகள் பதிகம் கிடைத்திலது! தலவிசேடம் - காவிரி வடகரை 9-வது பதி; IV பக்கம் 151 பார்க்க.