| 
			
			| | நனிபள்ளி யமர்ந்தபிரான் கழல்வணங்கி நற்றமிழின் புனிதநறுந் தொடைபுனைந்து திருச்செம்பொன் பள்ளிமுதற்
 பனிமதிசேர் சடையார் தம் பதிபலவும் பணிந்துபோய்த்
 தனிவிடைமேல் வருவார்தந் திருநின்றி யூர்சார்ந்தார்.
 |  | 149 |  | (இ-ள்.) நனிபள்ளி...புனைந்து - திருநனிபள்ளியில் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானது திருவடிகளைப் பணிந்து நல்ல தமிழின் இனிய தூய நறிய மாலையினைப் புனைந்து; திருச்செம்பொன்பள்ளி...பணிந்துபோய் - திருச்செம்பொன் பள்ளி முதலாகக் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை முடித்த சடையினையுடைய இறைவரது பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று; தனிவிடைமேல்...சரர்ந்தார் - ஒப்பற்ற இடபத்தின்மேல் வரும் இறைவரது திருநின்றியூரினைச் சார்ந்தருளினர். (வி-ரை.) நற்றிமிழின் புனித நறுந்தொடை - நன்மை, இனிமை, தூய்மை, நறுமை என்பன இப்பதிகச் சிறப்புக்கள். இவற்றைத் தனித்தனி இப்பதிகத்தினுள் வைத்துக் கண்டுகொள்க; "நாதிலன்" "நாடுடை நம்பெருமான்" "நானுடை மாடு", "நங்கட்கருளும்", "காலமு நாழிகையும் நனிபள்ளி மனத்தினுள்கி" என்பன முதலியவை சிந்திக்க.
 பதி பலவும் - இது திருப்பறியலூர், திருவிளநகர், திருமயிலாடுதுறை, திருக்கஞ்சாறு முதலாயின என்பது கருதப்படும்.
 தனிவிடை - தனி - ஒப்பற்ற; ஒன்று என்றலுமாம். "நரை வெள்ளேறொன் றுடையானை" "ஊர்வதோர்விடை யொன்றுடையான்" "ஒன்று கொலாமவரூர்வது தானே" (தேவா).
 | 
 |  |