நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி ஒன்றியவன் புள்ளுருகப் பாடுவா ருடையவர சென்றுமுல கிடர்நீங்கப் பாடியவே ழெழுநூறும் அன்றுசிறப் பித்தஞ்சொற் றிருப்பதிக மருள்செய்தார். | 150 | (இ-ள்.) நின்றியூர்....இறைஞ்சி - திருநின்றியூரில் எழுந்தருளிய இறைவரை அன்பினாலே திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; ஒன்றிய....பாடுவார் - ஒன்றுபட்ட அன்பு நிறைய உள்ளுருகும்படி பாடுவாராகி; உடைய அரசு....அருள் செய்தார் - ஆளுடைய அரசுகள் எக்காலத்திலும் உலகம் துன்பம் நீங்கி யின்பமடையும் படி பாடியருளிய ஏழெழுநூறு பதிகங்களைப் பற்றி அன்று பாராட்டிப் போற்றி அழகிய சொற்களானமைந்த திருப்பதிகத்தினை அருளிச் செய்தனர். (வி-ரை.) பாடுவாராகி - அருள் செய்தார் எனக்கூட்டி முடிக்க. உடைய அரசு - ஆளுடைய அரசுகளாகிய திருநாவுக்கரசர். என்றும் உலகு இடர் நீங்கப்பாடிய - உலகம் எஞ்ஞான்றும் இடர் நீங்கியுய்யும் பொருட்டே அரசுகள் பாடியருளினர் என்பது; என்றும் - பாடிய அற்றை நாளில் பற்பலவாறும் உலகம் இடர் நீங்கினமை சரித வரலாற்றினாலறியப்படும். அற்றை நாள் மட்டிலன்றி அன்று போலவே பின்னர் எக்காலத்தும் அப்பயனை உலகம் பெற்றுவரும் என்பதாம். அன்று உலகம் இடர் நீங்கியமை அப்பூதியார் திருமகனாராவுவிடந் தீர்ந்துய்ந்தது; திருவீழிமிழலையிற் படிக்காசு பெற்றுப் பஞ்சம் தீர்ந்தது; திருமறைக்காட்டிற் கதவம் திறந்தது; திருப்பழையாறை வடதளியில் சமணர் செய்த மறைப்பு நீங்கி ஈசர்க்கு விமானமாக்கியது; என்பன முதலியவாற்றானறிக. அவ்வாறுள்ள பயன் ஏற்ற பெற்றி இத்திருப்பதிகங்களை அன்புடன் பயிலும் அன்பர்கள் இன்றும் பெற்று வருதல் கண்கூடு. ஏழெழுநூறு - 7x700=4900 பதிகங்கள்; "பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி" (11-ம் திருமுறை - திருநாவுக்கரசர் திருவேகாதசமாலை) என்ற நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்குக் காண்க; "ஏழெழு நூறிரும் பனுவ லீன்ற வன்றிரு நாவினுக்கரையன்" என்பது நம்பிகள் பதிகம் 2. சிறப்பித்து - திருப்பதிகத்துட் போற்றி; பனுவல் - பதிகம். திருமுறை கண்ட புராணத்தினுள் (15) "ஒரு நாற்பத்தொன்பதனாயிரமதாக" என்பது பதிகப் பாட்டுக்கள். |
|
|