"மடலாரும் புனனீடூர் மருவினர்தாள் வணங்காது விடலாமே "யெனுங்காதல் விருப்புறுமத் திருப்பதிகம் அடலார்சூ லப்படையார் தமைப்பாடி யடிவணங்கி உடலாரு மயிர்ப்புளகம் மிகப்பணிந்தங் குறைகின்றார். | 152 | (இ-ள்.) மடலாரும்...திருப்பதிகம் - "இதழ்களையுடைய பூக்கள் நிறைந்த நீர்வளமுடைய திருநீடூரில் பொருந்தி எழுந்தருளியுள்ள இறைவரது திருவடிகளை வணங்காமல் விட்டுச்செல்லலாமோ? என்னும் ஆசையினைப் புலப்படுக்கும் விருப்பம் பொருந்திய அந்தத் திருப்பதிகத்தினால்; அடலார்...அடி வணங்கி - வல்லமையுடைய சூலப்படையினையுடைய இறைவரைப் பாடி அவர் திருவடிகளை வணங்கி; உடலாரும்...மிக - திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் மிகுதியும் உண்டாக; பணிந்து - நிலம் பொருந்த வணங்கி; அங்கு உறைகின்றார் - அப்பதியில் தங்கியருளுகின்றாராகி, (வி-ரை.) "மடலாரும்...விடலாமே" எனும் - இப்பதிகக் கருத்தாகிய குறிப்பு. "நிறை புனற்கழ னிச்செல்வ நீடூர்ப், பாரு ளார்பரவித்தொழ நின்ற பரமனைப்பணி யாவிட லாமே" என்பது பதிகம். பதிக மகுடம் பார்க்க; மடல் - இதழ்கள்; இங்கு இதழ்களையுடைய மலர் என்ற பொருளில் வந்தது. புனல் - நீர்ச்சிறப்பு; வணங்காது விடலாமே - பணியாது மேற்செல்லலாகுமோ? ஆகாது என்றபடி. காதல் விருப்புறும் - காதலாய் விளையும் பெருவிருப்பம் பொருந்திய; பதிகப்பாட்டுப் பொருள்களும் குறிப்பும் பார்க்க. உடலாரும் மயிர்ப்புளகம் மிக - திருமேனி முழுதும் நிறைந்த புளகாங்கித மிகப் பொருந்த; மிக - மிகும்படி. உறைகின்றார் - அமர்ந்து என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக; உறைகின்றார் - முற்றெச்சம். |
|
|