பாடல் எண் :3307

அங்கணினி தமர்ந்தருளாற் றிருப்புன்கூ ரணைந்திறைஞ்சிக்
கொங்கலரு மலர்ச்சோலைத் திருக்கோலக் காவணையக்
கங்கைசடைக் கரந்தவர்தா மெதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பாற்றொழுது திருப்பதிகம் போற்றிசைப்பார்,
153

(இ-ள்.) அங்கண் இனிதமர்ந்து - அங்கு இனிதாக அமர்ந்தருளி; அருளால் - அருள் விடைபெற்று; திருப்புன்கூர் அணைந்திறைஞ்சி - திருப்புன்கூரினில் அணைந்து வணங்கி மேற்சென்று; கொங்கலரும்...அணைய - மணமிகுந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோலக்காவினை அணையவே; கங்கை....கொடுத்தருள - கங்கையினைச் சடையிலே கரந்த இறைவர் தாம் நகர்ப்புறத்திலே எதிர்காட்சி கொடுத்தருள; பொங்கு....போற்றிசைப்பார் - மேன்மேல் அதிகரிக்கின்ற மிக்க விருப்பத்துடனே தொழுது திருப்பதிகம் பாடித் துதிப்பாராகி,
(வி-ரை.) அருளால் அருள் விடைபெற்று மேற்சென்று.
கொங்கலரும் மலர்ச்சோலைக் கோலக்கா - தலப்பெயரைப் பொருள் விரித்தபடி; கொங்கு - மணம்; அலர்தல் - விரிந்து வீசுதல்; கோலம் - அழகு; கா - சோலை; காரணப்பெயர் என்றற்கேற்ப இன்றும் விளங்குவது காண்க; அணைய - அணையும்போது. எதிர் காட்சி கொடுத்தருள - "கோலக் காவினிற் கண்டுகொண் டேனே" என்ற பதிக மகுடம் இதற்கு அகச்சான்றாகும்.
போற்றிசைப்பார் - போற்றிசைத்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. போற்றுவார் அருளிப்பாட்டினைப் போற்றிப் பாடினார் என்க.
திருப்புன்கூர்அணைந்திறைஞ்சி - இதுபோழ்து நம்பிகளருளிய பதிகம் கிடைத்திலது! "அந்தணாளன்" என்ற பதிகம் பின்னர் அருளியது.