திருஞான சம்பந்தர் திருக்கைக ளாலொற்றிப் பெருகார்வத் துடன்பாடப் பிஞ்ஞகனார் கண்டிரங்கி் அருளாலே திருத்தாள மளித்தபடி சிறப்பித்துப் பொருண்மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றிசைத்தார். | 154 | (இ-ள்.) திருஞானசம்பந்தர்...அளித்தபடி சிறப்பித்து - திருஞானசம்பந்த நாயனார் திருக்கைகளாலே தாள இசை ஒத்தறுத்துப் பெருகும் ஆர்வத்துடனே பாட இறைவனார் அது கண்டு இரங்கித் திருவருளாலே திருப்பொற்றாளம் கொடுத்தருளிய படியினைப் பாராட்டித் துதித்து; பொருள் மாலை...போற்றிசைத்தார் - மெய்ப்பொருள் விளங்கும் மாலையாகிய திருப்பதிகத்தினைப் பாடியே துதித்தருளினார். (வி-ரை.) திருஞானசம்பந்தர்....அளித்தபடி - திருத்தாளம் பெற்ற வரலாறு முழுமையும் சுருக்கிக்கூறிய கவிநயம் கண்டுகொள்க; திருஞானசம்பந்தர் திருக்கைகளா லொற்றி - "தாவில் தனிச் சிவஞான சம்பந்த ராயினார்" (1967) என்ற நிலைபெற்ற நாளை அடுத்த நாள் தாளம் பெறுதலால் திருஞானசம்பந்தர் என்ற இப்பெயராற் கூறினார் நம்பிகள் பதிகத்துள் இத்திருப்பெயராற் கூறியமையும் குறிப்பு. ஒற்றி - ஒத்தித் தாள ஒத்தறுத்தது. இரங்கி - பிள்ளையாரது பங்கயத்தினின் மிக்க மென்மையான கைம்மலர்கள் நேரம் என்று இரங்கி; "பாடலுக் கிரங்கும்" நம்பிகள் பதிகம் (8) பார்க்க. திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்து - அளித்த வரலாற்றினைப் பாராட்டி. பதிகம் (8) பார்க்க. திருத்தாளமுடையார் கோயில் எனப் பெயர் இன்றும் வழங்குதல் காண்க. இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதமாதலின் அதனைக் கூறிப்போற்றினார்; அவ்வற்புத அருள்நிகழ்ச்சி நடந்தது என்ற உண்மை பற்றிய தேவாரச்சான்றுமாம். பொருள்மாலைத் திருப்பதிகம் - இறைவரது பேரருட்டன்மைகளும் அவர் நம்பிகளை ஆட்கொண்ட வண்ணங்களும் பொருள்களாக எடுத்துக்கூறிய திருப்பதிகம். |
|
|