மூவாத முழுமுதலார் முதற்கோலக் காவகன்று தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய் மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார், | 155 | (இ-ள்.) மூவாத...அகன்று - எஞ்ஞான்றும் மூப்படையாத முழுமுதல்வராகிய சிவபெருமானது சிறந்த திருக்கோலக்காவினை நீங்கி; தாவாத...இறைஞ்சி - கெடாத புகழினையுடைய சண்பை என்னும் சீகாழிப் பதியினை வலமாகச் சுற்றிவந்து நிலமுறத் தாழ்ந்து வணங்கி; நாவார்...பரவிப்போய் - நாவார்ந்த முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்த நாயனாரது திருவடிகளைத் துதித்துச் சென்று; மேவார்தம்....மேவுவார் - பொருந்தாத பகைவர்கள் வாழும் முப்புரங்களையும் அழித்த சிவபெருமானது திருக்குருகாவூரினைச் சார்வாராகி, (வி-ரை.) மூவாத - மூப்படையாத; மூப்படைதல் அழிவுகாட்டும். எனவே இறப்பும், அதனைத் தொடர்ந்து பிறவியும் வரும்; மூவாத எனவே அழிவில்லாது என்றும் ஒரு தன்மையாயிருத்தல் குறிப்பு. முழுமுதலார் - தமக்கு மேற்பட்ட முதன்மை யுடையார் இலராவர்; முதலாருடைய என ஆறனுருபு தொக்கது. முதற் கோலக்கா - முதல் - சிறப்பு. தாவாத புகழ்ச்சண்பை - தாவாத - கெடாத; சண்பை - சீகாழியின் 9வது பெயர். சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி - சீகாழிப் பதியினுள்ளே மிதிக்காது நகரினையே வலம் வந்து வணங்கி என்க; ஆளுடைய "பிள்ளையார் திருவவதாரஞ் செய்த பெரும்புகலி, யுள்ளுநான் மிதியேனென் றூரெல்லைப் புறம்வணங்கி" நம்பிகள் அப்பதியினை வணங்க இறைவர் எதிர்காட்சி கொடுத்தருளினர் (258) என்பது முன்னர்க் கூறப்பட்டது; அவ்வரலாற்றினை இங்கு நினைவு கூர்க. நாவார் முத்தமிழ் விரகர் - முத்தமிழும் பிள்ளையாரது திருவாக்கிற் பொலிவெய்தின என்பார் நாவார் என்றார். முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப்போய் - பிள்ளையார் அவதரித்த தலம் என்றதனாலே அங்கு மிதித்து உட்செல்லாது போந்தாராதலின், அவரது திருவடிகளைத் துதித்து மேற்சென்றருளினர் என்க. மேவா...மேவுவார் - மேவார் - பகையினர்; முப்புரவாணர். மேவார்...மேவுவார் - விரோதவணி என்னுங் சொல்லணி, மேவுவார் - மேவுவாராகி; முற்றெச்சம்; பரவையார் கொழுநர் என்ற எழுவாய் மேற்பாட்டிலுள்ளதனுடன் கூட்டுக. நற்பதிகம் - என்பதும் பாடம். |
|
|