வேனிலுறு வெயில்வெம்மை தணிப்பதற்கு விரைகுளிர்மென் பானன்மலர்த் தடம்போலும் பந்தரொரு பாலமைத்தே ஆனமறை வேதியரா யருள்வேடங் கொண்டிருந்தார் மானமருந் திருக்கரத்தார் வன்றொண்டர் தமைப்பார்த்து. | 157 | (இ-ள்.) வேனிலுறு...அமைத்தே - வேனிலினில் பொருந்தும் வெயிலின் வெப்பத்தினைத் தணிப்பதற்கு மணமும் குளிர்ச்சியும் உடைய மெல்லிய செங்கழுநீர்த் தடாகம் போலும் பந்தரை ஒருபால் உண்டாகச் செய்தே. மானமரும் திருக்கரத்தார் - மான் பொருந்திய கையினையுடைய இறைவர்; ஆனமறை...கொண்டு - ஆயின மறைவேதியராக அருளுடைய திருவேடத்தினை மேற்கொண்டு; வன்றொண்டர் தமைப்பார்த்து - நம்பிகள் வருகின்றதை எதிர்பார்த்து; இருந்தார் - எழுந்தருளியிருந்தார். இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை.) வேனிலுறு வெயில் வெம்மை தணிப்பதற்கு - வேனிற் காலமாதலின் வெயிலில் நடந்துவந்த வெப்பத்தினையும், இங்குத் தங்கிப் பொதிசோறுண்டு இளைப்பாறுதற்குரிய நேரத்தில் மூளும் வெப்பத்தினையும் தணிக்க. தடம் - தடாகம்; மலர்வாவி; தடம் போலும் பந்தர் - குளிர்ச்சிதரும் தொழில் பற்றிய உவமம்; ஒருபால் - நம்பிகள் வரும் வழியில் ஒரு பக்கம்; வரும் வழியில் அவர் உட்புகும்படி அமைத்தார் என்பது; அமைத்து - எண்ணமாத்திரையில் உளதாகக் கண்டு. ஆன மறைவேதியராய் - ஆன - விதி முறைப்படி அமைவதான; மறைவேதியர் - மறைஎன்பது தொழில் முதலிய பண்பினைப் புலப்படுக்க என்றும், வேதியர் - என்பது சாதியினையும் உணர்த்தலிற் கூறியது கூறலன்மையுணர்க; மறை - உண்மை நிலையினை மறைக்கும் என்றலுமாம்; இப்பொருளில் மறை ஆன என்று கூட்டி உரைத்துக் கொள்க; ஆன - மேற்கொண்ட. அருள் வேடம் கொண்டு - கருணை புலப்படக் கொள்ளும் திருவேடத்தினை மேற்கொண்டு; இவ்வேடம் ஏனையோர் வேடம்போல மாயாகாரிய உருவமன்று; கருணையே திருமேனியாகக் காட்டி என்பது; "குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும்...நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே" (சித்தி 1. 95) என்பது ஞானநூலின் முடிபு. பார்த்து இருந்தார் - என்று கூட்டுக. இறைவர் செயலை முன்னும், வன்றொண்டர் தமை என்று தொண்டர் செயலைப் பின்னும் வைத்து வினைமுற்றினையும் முன்வைத்த வைப்புமுறை குறிக்கற்பாலது. "அவனரு ளாலே அவன்றாள் வணங்கி" (திருவா); "ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே" (தேவா) என்பன முதலிய திருவாக்குக்களா லறியப்படுமாறு இறைசெயல்...உயிரின் செய லிரண்டனுள் இறைவரருளும் செயலே முன்னிகழ்வதாம் என்பது உண்மை; "குழகர் வழி பார்த்திருப்ப" "....தம்பிரான் தோழர் புகுந்து இருந்தார்" என மேல்வரும் பாட்டிற்கூறும் முறையும் காண்க. வன்றொண்டர் - வலிமையாய்ப் பேசினும் விடாது தாமே வலிந்து தொண்டாக - ஆளாகக் கொண்டமையால், அவர் வருந்தாமைக் காத்தல் தமது கடமையாயிற்று என்ற குறிப்புப் பெற இப்பெயராற் கூறினார். "வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார்" (நம்பி - திருவெண்ணெய் நல்லூரும் திருநாவலூரும் - 2) வன்றொண்டர் தமைப் பார்த்து - "தம்மை யடைந்தார் வினைதீர்ப்ப தன்றோ தலையா யவர்தங் கடனா வதுதான்" (அரசு) என்ற இறைவர் கடமையும்காண்க. |
|
|