குருகாவூ ரமர்ந்தருளுங் குழகர்வழி பார்த்திருப்பத் திருவாரூர்த் தம்பிரான் றோழர்திருத் தொண்டருடன் வருவாரப் பந்தரிடைப் புகுந்துதிரு மறையவர்பாற் பெருகார்வஞ் செல விருந்தார் "சிவாயநம" வெனப்பேசி. | 158 | (இ-ள்.) குருகாவூர்....இருப்ப - திருக்குருகாவூரில் விரும்பி வீற்றிருந்து அருள்புரியும் குழகராகிய இறைவர் முன்கூறியவாறு வன்றொண்டர் வரும் வழியைப் பார்த்திருந்தாராக; திருவாரூர்த் தம்பிரான் றோழர்...புகுந்து - திருவாரூரில் உள்ள தம்பிரான் தோழராகிய வன்றொண்டர் திருத்தொண்டர்களோடும் வருவார் அந்தப் பந்தருள்ளே புகுந்து; திருமறையவர்பால்....எனப்பேசி - திருமறையவராய் அங்கிருந்தவரிடம் மிக்க ஆர்வஞ் சென்றமையாலே அவரருகு "சிவாயநம" என்று சொல்லி யமர்ந்தனர். (வி-ரை.) குருகாவூர்....இருப்ப - முன் கூறியவாறு இருப்ப என்க. வழிபார்த்தல் - அவ்வழியே நம்பிகள் வருவதனை எதிர்பார்த்தல். திருவாரூர்த் (தம்பிரான்) தோழர் - திருவாரூரில் வாழும் தோழர் என்க. தம்பிரான்றோழர் - நம்பிகளுக்கு அடியார் வழங்கிய பெயர். (273 275) திருவாரூர்த் தம்பிரான் என்று கூட்டி யுரைப்பினும் அமையும். அப்பந்தரிடைப் புகுந்து - அவ்வழியிற் பந்தரினுள்ளே புகுந்து; அப்பந்தர் உருவாலும் திருவாலும் இடத்தாலும் அவ்வழி வருவார் உட்புகாமல் போக இயலாதபடி அமைக்கப்பட்ட நிலை குறித்தது. அப்பூதி நாயனாரது தண்ணீர்ப் பந்தரினுள் அவ்வழிப்போந்த ஆளுடைய அரசுகள் புகுந்தமை பற்றிய நிகழ்ச்சிகள் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. திருமறையவர் - முன் "மறைவேதியர்" (3311) என்றதனையே தொடர்ந்து கூறியது; மறையவர் - வேடத்தினுள் மறைந்து நின்றவர்; மறைகளுக்குப் பொருளாவார் என்ற குறிப்பும் காண்க. மறையவர்பால் - இருந்தார் என்று கூட்டுக. பெருகார்வஞ் செல - "நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி" (186), "கண்டதோர் வடிவா லுள்ளங் காதல்செய் துருகா நிற்கும்" (188) என்றவையும், பிறவும் பார்க்க; தம்மை யறியாமலே அவர்பால் நம்பிகளின் ஆர்வஞ் சென்றது. "சிவாயநம" எனப்பேசி - பெரியோர்கள் சந்தித்தபோது முதலில் இறைவர் பெயர் சொல்லித் துதித்துப் பின் அளவளாவத் தொடங்குதல் மரபு. இங்கு இம்மரபு, தம்மை யறியாமலே முன்னின்ற இறைவரை நம்பிகள் துதித்ததாகிப், பயன் தந்தமை குறிக்கொள்க. பெரியோர் மரபுகள் எல்லாம் இவ்வாறு வரும் பயன் பற்றியன என்க. பேசி - சொல்லி. |
|
|