பாடல் எண் :3313

ஆலநிழற் கீழிருந்தா ரவர்தம்மை யெதிர்நோக்கிச்
"சாலமிகப் பசித்தீரிப் பொதிசோறு தருகின்றேன்;
காலமினித் தாழாமே கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளி் தண்ணீர் குடித்திளைப்புத் தீரு" மென,
159
(இ-ள்.) ஆலநிழல்...எதிர் நோக்கி - வடவாலமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த இறைவர் முன் சொன்னவாறு இருந்த நம்பிகளை எதிர் நோக்கி, "சாலமிக...தீரும்" என - நீர் மிகஅதிகமாய்ப் பசித்தீர்; என்னிடம் உள்ள இந்தப் பொதிசோறு தருகின்றேன்; இனியும் காலம் தாழ்க்காமல் இதனை ஏற்றுக் கொண்டு இங்கு இனிமையாய் உண்டு பொருந்தும்படி நல்ல குளிர்ந்த தண்ணீரினைக் குடித்து இளைப்பை தீர்வீராக" என்று சொல்ல,
(வி-ரை.) ஆலு நிழற் கீழ் இருந்தார் - மறையவராகிய சிவபெருமான்; வினைப்பெயர்; அங்கு ஏனையோர் பந்தரின்கீழ் இருந்தார். இவர் ஆலநிழற்கீழ் இருந்தார் என்றதொரு தொனியும் காண்க.
அவர் தம்மை - "சிவாயநம" எனப்பேசித் தம்பால் வந்திருந்த நம்பிகளை; அவர் - முன்னறிசுட்டு.
சால மிகப் பசித்தீர் - சால மிக - மிகவும் அதிகமாக; ஒருபொருட் பன்மொழி மிகுதி குறித்தது. பசியினை, முகவாட்டம் - மேனியிளைப்பு - முதலிய புறத்தே தோற்றும் மெய்ப்பாடுகளாலன்றி உள்ளே நின்றபடி அறிந்தார் என்பதுமுன்னர்க் கருத்தறிந்து (3310) என்றதனால் அறியப்பட்டது.
இப்பொதிசோறு - தம்முன் இருந்த பொதி சோற்றினைக் காட்டி இப்பொதி என்றார்; தருகின்றேன் - தருதல் ஒப்பவனது உரை; நான் அநாதிசைவன்; நீர் நம்மருளால் அதிகரித்து வழிவழிவரும் ஆதிசைவர்; இவ்வொப்புமையால் நான்தரும் சோறு கொள்ளத்தகும் என்பது குறிப்பு; மறையவர் சொல்லியவாறேமேல் நம்பிகளும் "மறை முனிவர் தரும் பொதிசோறு" (3314) என்பதும் காண்க.
காலம் இனித் தாழாதே - இனியும் தாழ்த்தலால் பசியும்அதனால்வரும் வருத்தமும் மிகும் என்று பரிவுடன் கூறிய கருணைமொழி.
கைக்கொண்டு - ஏற்றுக்கொண்டு; கையில் ஏற்றுக்கொண்டு என்பதும் குறிப்பு; இங்கு - இப்பந்தரிடையே; இது வழியிடை உணவு கொள்ளத்தக்க இடம் இது என்ற குறிப்புமாம்.
ஏல நறுங் குளிர் தண்ணீர் குடித்து - ஏல - பொருந்த; பொதிசோற்றுளவுக்குப் பொருந்த உள்ள: நறுமை - இனிமை; குளிர் தண்ணீர் - குளிர்ந்த நீரே குடிக்கத்தக்கது என்பது மருத்துவ நூல்விதி; நோய் கொண்டவர்க்கே வெந்நீர் விதிக்கப்படும். இங்குக் கூறிய நீர் மறையவனார் உடன்கொண்டு வந்தது (3310).
இளைப்புத் தீரும் - இளைப்பு - பசி - தாகம் - வெயில் வெப்பம் - வழிநடை முதலிய பலவற்றாலும் நேர்ந்த இளைப்பு; தீரும் - இளைப்பினின்றும் நீங்குவீராக.
என - என்று சொல்ல.