பாடல் எண் :3314

வன்றொண்ட ரதுகேட்டு "மறைமுனிவர் தரும்பொதிசோ
றின்றுநமக் கெதிர்விலக்க லாகா"தென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூன்மார்பர் தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றதிருத் தொண்டருடன் றிருவமுது செய்தருளி,
160

(இ-ள்.) வன்றொண்டர்...இசைந்தருளி - வன்றொண்டர் அதனைக்கேட்டு "மறைவேதியராகிய இவர் தருகின்ற இந்தப் பொதிசோற்றினைக் கைக்கொள்ள இசையாது இன்று மறுப்பது நமக்குத்தகாது" என்று கருதி இசைந்தருளிச் செய்து; பொன்தயங்கு...வாங்கி - பொன் விளங்கும் நூலணி மார்பினையுடைய இறைவர் தருகின்ற பொதிசோற்றினை வாங்கிக்கொண்டு; சென்ற.........செய்தருளி - உடன்சென்ற திருத்தொண்டர்களுடனே திருவமுது செய்தருளி,
(வி-ரை.) வன்றொண்டர்....இசைந்தருளி - வன்றொண்டர் - முன் "வன்றொண்டர்" (3311) என்றதும் காண்க. மறை முனிவர் - மறையவர் வேடத்துள் மறைந்து நின்ற முனிவர்.
பொதிசோறு...ஆகாது - இது நம்பிகள் மனத்துள் எண்ணியது. திருவருட் குறிப்பினால் எழுந்த கருத்து.
எதிர் விலக்கல் - மறுத்து ஏதேனும் சொல்லி இசையாது விலக்குதல். இன்று....ஆகாது வரும் வழியிடையிலும் முன் அறியாதாரிடத்தும் இவ்வாறுதரப்படும் சோற்றினை ஏதேனும் காரணம்பற்றி விலக்குதலன்றி, ஏற்பது பெரியோரது மரபன்றாயினும், இன்று இஃது அவ்வாறு மறுக்கற்பாலதன்று என்பதாம். இஃது இறைவரது அருட்பார்வையாலும் சொல்லாலும் ஆகியதேயன்றி நம்பிகளது பசிவருத்தத்தா லாயதன்று.
பொன் தயங்கு நூன்மார்பர் - மறையவராய் நின்ற இறைவனார்; பொன் - பொன்ஒளி; தயங்குதல் - விளங்குதல்; பொன்னார் மார்பர் - நூன்மார்பார் - என்று தனித்தனி கூட்டுக; சோறு அது - அது - பகுதிப் பொருள் விகுதி.
சென்ற - உடன்வந்த; சென்று - என்ற பாடம் சிறப்பிலது.