எண்ணிறந்த பரிசனங்க ளெல்லாரு மினிதருந்தப் பண்ணியபின் னம்மருங்குப் பசித்தணைந்தார் களுமருந்த உண்ணிறைந்த வாரமுதா யொருகாலு முலவாதே புண்ணியனார் தாமளித்த பொதிசோறு பொலிந்ததால். | 161 | (இ-ள்.) எண்ணிறந்த...பண்ணியபின் - அளவில்லாத பரிசனங்கள் எல்லாரும் இனிதாக உண்ணும்படி செய்த பின்பு; அம்மருங்கு...அருந்த - அந்தப் பக்கத்துப்பசித்து வந்தணைந்தவர்களும் உண்ண; உண்ணிறைந்த...பொலிந்தது - உள்ளே நிறைந்த இனியஅமுதம் போல ஒரு சிறிதும் எவ்வாற்றானும் குறைவில்லாதபடி புண்ணிய மறைவேதியர் தாம் கருணையுடன் தந்த பொதிசோறு விளங்கிற்று; (ஆல் - அசை). இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை.) எண்ணிறந்த பரிசனங்கள் - நம்பிகளுடன் அளவில்லாத பரிசனங்கள் யாத்திரையில் தொடர்ந்து சென்றார்கள் என்பது விளங்குகின்றது; ஆளுடைய அரசுகளது தனித்த யாத்திரை இதனுடன் ஒப்பு நோக்கி உணரற்பாலது. நம்பிகளின் பரிசனங்களைப் பற்றிப் பின் 3329லும் பார்க்க. எல்லாரும் - உடனிருந்த தொண்டர்களும் பரிசனங்களல்லாத பிறரும்; பரிசனங்களாய் வந்த எல்லாரும் என்றலுமாம். அம்மருங்குப் பசித்தணைந்தார்களும் - வழிக்கரையில் தண்ணீர்ப்பந்தருடன் பொதிசோறு மருத்தலின் அவ்வழியே செல்வோர்களுட் பசித்து வந்தவர்கள். இவ்வாறாகிய பசு தர்மங்களும் செய்யத்தக்கவை என்ற நிலையினை அறஞ்சொன்ன இறைவர் தாமே செய்து காட்டியவாறாம்; நம்பிகள் பரிசனங்கள் இவர்கள்பாற்பட்டபோது இதுவே பதிதருமமாகும்; பசித்தணைந்த ஏனையோர்பாற்பட்டபோது அதுவே பசு தருமமாகும். இறைவர் செய்தமையால் இவற்றின் பயன்கள் முறையே அவை செய்யப்பட்டார்பாற் சார்ந்தன. இறைவர் தந்த பொதிசோறு யுயர்ந்தாரலர் என்பதும் காண்க; மேல் வருவதன் கருத்தும் கருதுக. உண்ணிறைந்த...பொலிந்ததால் - உண்ணிறைந்த ஆரமுதாய் - உலவாக் கோட்டையாகிய அமுதமாகி. உண்ணிறைதல் - எடுக்க எடுக்கக் குறையாது உள்ளே நிறைந்து பொலிதல்; ஆரமுது - பொதிசோறு. அமுதாய் - அமுதம் போல என்றலுமாம். புண்ணியனார் - எல்லாப் புண்ணியங்களின் பயனானவர் சிவபெருமான். அளித்த பொதிசோறு - தண் அளியுடன் கொடுத்தருளிய சோறு; ஈண்டு, நீர் வேட்கையாலும் பசியாலும் மிக வருந்திவரும் தம்அடியாராகிய நம்பிகளுக்கு அளித்தது சாலும்; ஏனைப் பரிசனங்களுக்கும் மற்றும் அணைந்தோர்களுக்கும் அளித்த தன் இயைபு என்னை? எனின், அவர்களும் பசியான் வருந்தி யணைந்தமை காரணமாக நம்பிகள் பொருட்டு வந்த தண்ணளி எல்லார்க்குமாயிற்று என்க; புவனத்தில் உண்மையில் நீரும் உணவுப்பொருளும் உளவாக்கி எல்லாவுயிர்க்கும் பசிதீர்க்க வுதவுபவர் இறைவரேயாம் என்பது மறக்கற்பாலதன்று; ஆயின் ஈண்டுப் பொதிசோறேயாகி உண்ணப்பெற்றது நம்பிகளது சார்பினாலும் அங்கு அவ்வவர் வந்து சார்ந்த ஊழ்வினையாகிய நியதியாலுமாம்; ஏனையோர் பக்கல் பயன் வேறு என்பது அணைந்தார்களும் என்ற உம்மையாலும் பெறப்படும். |
|
|