பாடல் எண் :3316

சங்கரனார் திருவருள்போற் றண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரு மாதரவா லவர்நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வாற் பள்ளியமர்ந் தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தாரப் பந்தரொடுந் தாங்கரந்தார்.
162

(இ-ள்.) சங்கரனார்...ஆர்ந்து - சங்கரனாருடைய திருவருளினைப் போலப் பெற்ற தண்ணீரையும் அருந்தி அதன் சுவையும் நிறைந்து; பொங்கிவரும்....புகழ்ந்தேத்தி - மேன்மேலும் அதிகரித்து மிகுகின்ற அன்பினாலேஅவரது திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையே புகழ்ந்து துதித்து; அங்கு...துயில - அவ்விடத்தில் உடல் இளைப்பினாலே நம்பிகள் பள்ளிகொண்டு துயிலவும், பக்கத்தில்அணைந்தவர்களும் துயிலவும்; கங்கை...கரந்தார் - கங்கையைச் சடையிலே ஒளித்தவராகிய சிவபெருமான் அந்தப் பந்தருடனே தாமும் ஒளித்தருளினார்.
(வி-ரை.) சங்கரனார் - சுகத்தைச் செய்பவர் என்பது சொற்பொருள்; இங்கு வழியிடை எதிர்பார்த்திருந்து பொதிசோறும் தண்ணீரும் கொடுத்து இளைப்பு நீக்கிச் சுகம் செய்தவர் என்ற காரணக் குறிப்புப்பட இப்பெயராற் கூறிய நயம் காண்க.
திருவருள் போற் - சுவை ஆர்ந்து - அருள் இனிப்பது போலத் தண்ணீரும் இனிப்பது என்பதாம்; சோறு அருந்திய அளவெல்லாம் முன்கூறி முடித்தபின், நீரின் சுவை ஆர்தலைக் கூறியது, உணவு உண்டு முடிந்த நிலையினன்றி, உணவு கொள்ளும் இடையில் நீர் உண்ணலாகாது என்ற மருத்துவ நூலோர் முடிபு குறித்தற்கு.
அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி - அவர் நாமமாவது திருவைந்தெழுத்து; "ஆலைப்படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மைந்தெழுத்தின் நாமத் தான்காண்" (தேவா); முன்பு, இருந்தார் "சிவாயநம" வெனப்பேசி (3312) என்றது காண்க. நம்பிகள் தமையறியாமலே அச்சிவ மறையவரது நாமத்தையே துதிக்கின்றார்; யாது நன்மையாவர் மூலம் வரினும் அவை யாவும் சிவனருள் என்று கொண்டு சிவனைத் துதித்தல் பெரியோரியல்பு. "வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நானறியேன் மறு மாற்றம்" (நம்பி - தேவா) என வருவதும், "நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சி வாயவே" (நம்பி) என்றதும் கருதுக.
அங்கு அருளாற் பள்ளி அமர்ந்து - அருளால் - அருள்வயப்பட்டு; அருள் வயத்தாலன்றி அது துயிலுதற் கான இடமும் காலமுமல்ல என்பது குறிப்பு. "அருளாலோ?" (3202) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; அங்கு - வரும் வழியிடைக் கண்ட அப்பந்தரிடையே; பள்ளி அமர்ந்து - துயின்று; நம்பிகள் என்றஎழுவாய் தொக்குநின்றது. அருகணைந்தார்களும் - உம்மை இறந்ததுதழுவிய எச்சவும்மை.
சடைக்கரந்தார்....தாம்கரந்தார் - கரந்தார் - முன்னையது வினைப்பெயர்; பின்னையது வினைமுற்று; சொற்பின் வருநிலை.