சித்தநிலை திரியாத திருநாவ லூர்மன்னர் அத்தகுதி யினிற்பள்ளி யுணர்ந்தவரைக் காணாமை "இத்தனையா மாற்ற மறிந்திலே" னெனவெடுத்து மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்றடைந்தார். | 163 | (இ-ள்.) சித்தநிலை...பள்ளியுணர்ந்து - மனநிலையின் ஒருசிறிதும் திரிதல் இல்லாத திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள் அவ்வாற்றினிலே துயிலுணர்ந்து. அவரைக் காணாமை - அந்த மறைவேதியரைக் காணாமையால்; "இத்தனையாம்....எடுத்து" இத்தனை யாமாற்றம் அறிந்திலேன்" என்று தொடங்கி; மெய்த்தகைய....சென்றடைந்தார் - சத்தாந் தன்மையுடைய திருப்பதிகத்தினைப் பாடியருளியவாறே திருக்குருகாவூரினைச் சென்றடைந்தார். (வி-ரை.) சித்தநிலை திரியாத - துயிலும்போதும் சித்தம் திரியாது அறிதுயில் கொண்டு சிவயோக நிலையில் சிவனை மறவாநிலையில் உள்ள; திரியாதவராயினும் இறைவர் காட்டினாலன்றி அறியுமாறில்லை என்பது குறிப்பு. அத்தகுதியினிற்பள்ளி உணர்ந்து - அந்த நிலையில் நின்றவாறே துயிலுணர்ந்து - காணாமை - காணாதபடியால்; அவரை - மறைவேதியராய்க் காணநின்று பொதிசோறும் நீரும் அளித்த அவரை; முன்னறிசுட்டு. "இத்தனையா மாற்ற மறிந்திலேன்" என இப்பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; மாற்றம் - மாறுதல்; எடுத்து - தொடங்கி. மெய்த்தகைய - மெய்விளங்கும் தன்மையுடைய; சென்று - அவ்விடத்தினின்றும் திருக்குருகாவூருக்குச் சென்று. |
|
|