பாடல் எண் :3318

குருகாவூ ரமர்ந்தருளுங் குழகனார் கோயிலினுக்
கருகார்பொற் கோபுரத்தை யணைந்திறைஞ்சி யுள்புக்கு
வருகாதல் கூரவலங் கொண்டுதிரு முன்வணங்கிப்
பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகினார்.
164

(இ-ள்.) குருகாவூர்....அணைந்திறைஞ்சி - திருக்குருகாவூரின்கண் விரும்பியிருந்து அருள்புரிகின்ற இறைவரது திருக்கோயிலினுக்கு அருகேசார்ந்துநிறைந்த அழகிய திருக்கோபுரத்தை அணைந்து வணங்கி; உள்புக்கு....வணங்கி - உள்ளே புகுந்து நிரம்பின பெருங்காதல் கூர வலம்வந்து இறைவரது திருமுன்பு வணங்கி; பருகா....பருகினார் - முன் பருகப்படாத இனிய அமுதம்போலும் சிவபெருமானைக் கண்களினாலே பருகினார்.
(வி-ரை.) வருகாதல் - இறைவர் தம்பாற் செய்த பேரருள் காரணமாக வரும் பேரன்பு.
பருகா இன்னமுதத்தைக் கண்களாற் பருகினார் - பருகாத இனிய அமுதமாவார் இறைவர்; முன்னர் இவ்விறைவரே மறை வேதியராய்க் கண்முன் வந்தருளியும் அவரை அவரே யென்று காணாமையின் அவரளித்த அமுதத்தினைப் பொதி சோறென்று பருகினாரே யன்றி அவரது திருவருளை இறைவரதென்று கண்டு பருகினாரல்லர்; அவ்வாறு அவர் வெளிப்பட்டு நின்ற பந்தரின் இடத்திற் பருகாது இங்குப் பருகினார் என்க. பருகுதல் - வாயின் றொழில் இங்கு அநுபவம் நுகர்ச்சி என்ற பொருளில் கண்களின் றொழிலாகக் கூறப்படுதலின் கண்களால் என விசேடித்தார்; அமுதம் தேவர்கள் வாயிற் பருகினாற் போலப் பருகப் படாமையின் பருகாவின்னமுதம் என்றும், காட்சி வாயிலாகத் தரிசித்துப் பேரானந்த மடைதல் பருகுதலோ டொத்தலின் கண்களாற் பருகினார் என்றும் கூறினர் என்பது ஈண்டு ஆறுமுகத் தம்பிரானார் உரைக்குறிப்பு. இக்கருத்தையே தொடர்ந்து மேற்பாட்டிற் "கண்ணார்ந்த வின்னமுதை" என்பதுங் காண்க.
குருகாவூர் மணிவயிரக் கொழுந்தனார் - என்பதும் பாடம்.