பாடல் எண் :3319

கண்ணார்ந்த வின்னமுதைக் கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்தேத்தி
உண்ணாடும் பெருங்காத லுடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருட னங்கினிது நயந்திருந்தார்.
165

(இ-ள்.) கண்ணார்ந்த...இன்னமுதை - கண்ணிறைந்து நுகர நின்ற இனிய அமுதமாகிய இறைவரை; கையாரத் தொழுதிறைஞ்சி - கைகள் குளிரத்தொழுது வணங்கி; பண்ணார்ந்த...பணிந்தேத்தி - பண்ணிறைந்த திருப்பதிகத்தினைப் பாடியே வணங்கித் துதித்து; உள்நாடும்....புறத்தெய்தி - உள்ளத்தினுள்ளே சிவயோக நிலையில் நாடி நுகரும் பெருங்காதலுடையவராகிய நம்பிகள், புறத்திலே வந்து; நண் ஆர்வம்...இருந்தார் - பொருந்திய பெரிய அன்பு மிகுதியும் உடைய திருத்தொண்டர்களுடனே கூடி அத்திருப்பதியினிடத்து இனிதாக விரும்பி எழுந்தருளியிருந்தார்.
(வி-ரை.) கண் ஆர்ந்த இன்னமுதை - கண் ஆர்தல் - கண்களால் நிறையக் கண்டு நுகர்தல்; அமுது - அமுது போல்வாரை அமுதென்றதுபசாரம்.
கண்ணார்ந்த - கையார - "கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்" (அம்மை. அற். அந்.); "கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்" (திருவிசைப்பா)
பண்ணார்ந்த திருப்பதிகம் பாடியே - இப்பதிகம் கிடைத்திலது!
உள்நாடும் பெருங்காதலுடையவர் - உள் நாடுதல் - சிவயோக நிலையில் இறைவரை உள்ளத்தில் கண்டு கூடிச் சிவானந்த நுகர்ச்சியில் திளைக்கும் பேரார்வமுடையவர் நம்பிகள்; "பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" (327) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; "தேடுவன் றேடுவன் றிண்ணெனப் பற்றிச் செறிதர, ஆடுவ னாடுவ னாமாத் தூரெம் மடிகளைக், கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்போடே" "ஓர்ந்தன னோர்ந்தன னுள்ளத்துள்ளேநின்ற வொண்பொருள்" "தேடுவன் றேடுவன் செம்மலர்ப் பாதங்கணாடொறும், நாடுவ னாடுவ னாபிக்கு மேலேயோர் நால்விரல்....மகிழ்ந்துளேயாடுவ னாடுவன்" (திருவாமாத்தூர்) என்பனவாதி நம்பிகள் திருவாக்குக்கள் காண்க; "தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர், சென்னியிலுஞ் சிந்தையிலு மலர்வித்து" (328) முதலியவையும் பார்க்க.
பெருங் காதலுடையவர் - இது நம்பிகளது இயல்பு குறித்தது.
நண் ஆர்வத் திருத்தொண்டர் - நண் - நம்பிகளுடன்கூட இறைவர்பாற் பொதிசோறுண்டு இறைவர் கரந்தமை யறிந்து கூடவே வந்து பொருந்திய; ஆர்வம் - இறைவரது அந்தஅருளிப்பாட்டில் ஈடுபட்டதனால் அன்புமிக் உடன் நண்ணிய.
நயந்து - விரும்பி; இனிது - இன்பம் பொருந்தி.