அந்நாளிற் றம்பெருமா னருள்கூடப் பணிந்தகன்று மின்னார்செஞ் சடைமுடியார் விரும்புமிடம் பலவணங்கிக், கன்னாடு மெயில்புடைசூழ் கழிப்பாலை தொழுதேத்தி, தென்னாவ லூர்மன்னர் திருத்தில்லை வந்தடைந்தார். | 166 | (இ-ள்.) அந்நாளில்...அகன்று - அந்நாளிலே தமது பெருமானது திருவருள்விடை பெற்றுப் பணிந்து அங்கு நின்றும் நீங்கிப் போய்; மின்னார்....வணங்கி - ஒளிவிளங்கும் சிவந்த சடையினையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் வணங்கிக்கொண்டு; கல்நாடும்...ஏத்தி - கல்லினாலியன்ற அழகிய மதில் பக்கத்திற் சூழ்கின்ற திருக்கழிப்பாலையினைத் தொழுது துதித்து; தென்நாவலூர்....அடைந்தார் - தென்நாவலூரில் அவதரித்த தலைவராகிய நம்பிகள் திருத்தில்லை நகரின்கண் வந்து அடைந்தனர். (வி-ரை.) அருள்கூட - திருவருள் பொருந்த விடைபெற்று; அருள் - கூடும் படி பணிந்து என்று கூட்டி உரைத்தலுமாம். இடம்பல வணங்கி - இவை (தென்) திருமுல்லைவாயில், திருமயேந்திரப்பள்ளி, திருநல்லூர்ப் பெருமணம் முதலாயின என்பது கருதப்படும். இவற்றிற்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! இவற்றை வணங்கிக் கொள்ளிடத் திருநதி கடந்து நம்பிகள் வடக்கு நோக்கிச் சென்றருள்கின்றார். கல்நாடும் எயில் - கல் எயில் - நாடும் எயில் - என்று தனித்தனிக் கூட்டுக; கல்எயில் - கல்லாலியன்ற மதில். நாடும் - நாடத்தக்க; அழகிய. கழிப்பாலை - திருக்கழிப்பாலையினை; கன்னாடு மெயில் புடைசூழ் கழிப்பாலை - இத்திருக்கோயில் முன்னர்ப் பெருந் திருக்கோயிலாகக் கொள்ளிட நதியின் வடகரையில் இருந்தமை அறியப்படும்; அஃது ஆற்றின் வெள்ளத்தில் அழிவு பட்டமையால் இப்போது சிவபுரியில் (3 திருநெல்வாயில்) சிறு தனியாலயமாகத் தாபிக்கப்பட்டுள்ளது. தலவிசேடம் பார்க்க. "கழியார் செல்வமல்கும்" (10) என்ற பதிகம் இதன் முன்னாட் பெருமை குறிப்பது. ஏத்தி - திருப்பதிகம் பார்க்க. அருள்கூர - மருங்கணைந்தார் - என்பனவும் பாடங்கள். |
|
|