"திருநாவ லூர்மன்னர் சேர்கின்றா" ரெனக்கேட்டுப் பெருநாமப் பதியோருந் தொண்டர்களும் "பெருவாழ்வு வருநா"ளென் றலங்கரித்து வந்தெதிர்கொண் டுள்ளணையச் செருநாகத் துரிபுனைந்தார் செழுங்கோயி லுள்ளணைந்தார். | 169 | (இ-ள்.) திருநாவலூர் மன்னர்...கேட்டு - திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள் வருகின்றாரென்ற செய்தியினைக் கேட்டு, பெருநாமம்....உள் அணைய - பெரிய புகழினையுடைய அந்தப் பதியில் உள்ளவர்களும் திருத்தொண்டர்களும் தங்களுக்குரிய பெரிய வாழ்வு வருகின்ற திருநாள் என்று கொண்டு பதியினை அலங்கரித்து நகர்ப்புறத்தே வந்து எதிர்கொண்டழைத்துக் கொண்டு உள்ளே செல்ல; செருநாகத்து...அணைந்தார் - போர் வல்ல யானையின் தோலைப்போர்த்த இறைவரது செழுங்கோயிலினுள்ளே அணைந்தருளினர். (வி-ரை.) திருநாவலூர்...கேட்டு - இஃது அவ்வூரவரும் தொண்டர்களும் கேள்விப்பட்ட செய்தி. பதியோரும் தொண்டர்களும் - பதியோர் வேறு; தொண்டர்கள் வேறு; பதியோர் தமது அந்தப் பதியினுக்கும் நம்பிகளுக்கும் உள்ள உலகியற் றொடர்பு பற்றி வருபவர்கள்; தொண்டர்கள் அவ்வாறன்றி நம்பிகளுக்கும் தமது இறைவராகிய சிவபெருமானுக்கும் உள்ள உயிரியற் றொடர்பு பற்றித் திருத்தொண்டடெனு நிலையில் உரிமை பூண்டு வருபவர்கள். "பெருவாழ்வு வருநாள்" என்று - வரவு தமக்குப் பெரியதோர் சிறப்பாகிய வாழ்வு வரும் நாளாகும் என்று உட்கொண்டு. செருநாகம் - போர் குறித்து வந்த யானை; நாகம் - யானை. பெருநாமப் பதியோர் - நாமம் - புகழ்; பெருமை என்றலுமாம். இப்பதி திருநாமநல்லூர் என வழங்கும் வழக்கும் கருதத்தக்கது. |
|
|