மேவியவத் தொண்டர்குழா மிடைந்"தர" வென்றெழுமோசை மூவுலகும் போயொலிப்ப முதல்வனார் முன்பெய்தி ஆவியினு மடைவுடையா ரடிக்கமலத் தருள்போற்றிக் "கோவலனான் முக" னெடுத்துப் பாடியே கும்பிட்டார். | 170 | (இ-ள்.) மேவிய....ஒலிப்ப - எதிர்கொள்ளப் பொருந்திய அந்தத்தொண்டர் கூட்டம் நெருங்கி "அரகர" என்று முழக்குதலாலுளதாகிய ஓசை மூன்றுலகங்களிலும் சென்று ஒலி செய்ய; முதல்வனார் முன்பு எய்தி - இறைவரது திருமுன்பு சார்ந்து; ஆவியினும்...அருள்போற்றி - உயினும் சிறந்தவராய் அடைதற்குரிய சிவபெருமானது திருவடிக் கமலங்களின் அருளினைப் போற்றி; கோவலனான் முகன்"....கும்பிட்டார் - "கோவலனான்முகன்" என்று தொடங்கித் திருப்பதிகத்தினைப் பாடியே கும்பிட்டருளினர். (வி-ரை.) அர என்று எழும் ஓசை - நம்பிகளது வரவு தமது பெருவாழ்வு ஆகும் என்றும், அது சிவபெருமான் றிருவருளாலே வந்தது என்றும், கொண்டார்களாதலின் அரனாம முழக்கம் செய்து போற்றினர்; எழும் - எழுப்பிய; முழக்கிய என்று பிறவினைப் பொருள் கொள்க. மூவுலகும் போய் ஒலிப்ப - ஒலி அலைகள் பரம்பரையிற் சேணிலும் சென்றொலிக்குமென்பது இற்றைநாள் வானொலி இயக்கத்தினால் நேரே அறியப்படுதலின், இஃது உண்மை நவிற்சியேயாம். அன்றியும் இம்முழக்கத்தின் பயன் மூவுலகும் பெற நிற்பதும் குறிக்க. மூவுலகு - மேல் நடுக் கீழ் உலகங்கள். ஆவியினும் அடைவுடையார் - ஒருவர்க்குத் தன் உயிரினும் சிறந்து பயன் செய்பவர் இறைவர் என்பதாம். "என்னில் யாரு மெனக்கினி யாரில்லை, யென்னிலும்மினி யானொரு வன்னுளன், என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக், கென்னுளேநிற்கு மின்னம்ப ரீசனே" (தேவா) என்று இக்கருத்தினைத் தேற்றம் பட ஆளுடைய அரசுகள் அருளுதல் காண்க. அடைவு - அடையத்தக்க சார்பு. "அடைவு திருத்தாண்டகம்" என்பதும், அத்திருப்பதிகக் கருத்தும் கருதுக. "கோவல னான்முகன்" எடுத்து - பதிகத்தின் தொடக்கமாகிய முதற்குறிப்பு; போற்றி எடுத்து என்க. கோவல னான்முகன் - என்று தொடங்கும் திருப்பதிகம். திருநாவலூர் பண் - நட்டராகம் - இத்திருப்பதிகம் இப்போது அருளியது. பிற பதிப்புக்களில் குறித்திருந்தவாறே முன்முறை நம்பிகள் இப்பதியினை வழிபட்ட வரலாறு கூறுமிடத்தில் அது தரப்பட்டது; தலவரலாற்றின் நினைவுக்காக அப்பதிகள் ஆங்குத் தரப்பட்டுள்ளது. பதிகப் பாட்டுக் குறிப்புக்களும், தலவிசேடமும் I - பக்கம் 258 பாட்டு 224-ன் கீழ்ப் பார்க்க. இத்தலத்திற் சுக்கிரன் வழிபட்டுப் பேறுபெற்றனன். சுவாமி பெயர் - பக்தசனேசுவரர் என்றும், அம்மை பெயர் மனோன்மணியம்மை என்றும் வழங்குவர். நம்பிகள் சந்நிதி தனிக் கோயிலாக வெளிச்சுற்றில் தென்கிழக்கில் உள்ளது; வரதராசர் என்ற பெயரால் விட்டுணு சந்நிதியும் உண்டு. கோயிலுக்கும் மேற்புறம் கோமுகிதீர்த்தம் என்ற சிற்றோடையும், தெற்கில் ? நாழிகையளவில் திருக்கெடில நதியும் உள்ளன; இத்தலபுராணம் திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப கவிராயர் இயற்றியுள்ளார். |
|
|