பாடல் எண் :3325

நலம்பெருகு மப்பதியி னாடியவன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர் குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார் தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரி நூன் மணிமார்பர் பிறபதியுந் தொழப்போவார்,
171
(இ-ள்.) நலம் பெருகும்...நயந்து - நன்மைகள் பெருகுதற்கிடமாகிய அத்திருப்பதியிலே நாடிய அன்பினாலே விரும்பி; குலம்...அமர்ந்து - குலம் மிகுகின்ற திருத்தொண்டர் கூட்டங்களுடனே இனிதாக வீற்றிருந்தருளி; சலம்....அருள் பெற்று - கங்கையாறு பெருகுதற்கிடமாகிய சடைமுடியினையுடைய இறைவரது திருவடிகளை வணங்கி அருள்விடை பெற்று; பொலம்புரி நூல்....போவார் - அழகு விளங்கும் பூணூல் அணிந்த மணிமார்பினை உடைய நம்பிகள் பிற பதிகளையும் சென்று தொழுவதற்குப் போவாராகி,
(வி-ரை.) நலம் பெருகும் - நன்மைகள் பெருகுதற்குக் காரணமாகிய பெருகும் - பெருக்கும் - பெருகச்செய்யும் எனப் பிறவினையாகக் கொள்வதுமாம்.
நாடிய அன்பு - நாடி வந்தடைந்த அன்பு.
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாம் - குலம் இனமாவது ஈண்டு அவ்வவர் செய்யும் சரியையாதி தொண்டுகளின் வகை குறித்தது. குழாம் - எல்லாம்கூடிய தொகுதி; குலம் - உலகியற் குலமரபு குறித்ததாகக்கொண்டு பல குலத்தவரும் என்ற குறிப்புப்பட உரைத்தலுமாம்; "நாடவர் நாடறி கின்றகுலமிலராகக் குலம்துண்டாக" (தேவா); "தேவர் பெருமா னெழுச்சி...யாவ ரென்னா துடன்சேவித் தெல்லாக் குலத்தி லுள்ளோரு, மேவ வன்பர் தாமுமுடன் சேவித்து" (1887); "எழுச்சி சேவித் துடனண்ண, வெங்கு மெல்லா ரும்போத விழிவு தொடக்கிற் றெனையென்று" (1889) "ஆத லாலே குளித்தடுத்த தூய்மை செய்தே யகம் புகுந்து, வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும்" (1890) என்ற வரலாற்றின் கருத்துக்களை ஏற்ற பெற்றி ஈண்டு வைத்துக்காண்க. குலம் - பெருமை என்றலுமாம்.
சலம் பெருகும்....சலம் - கங்கையாறு; பெருகுதலாவது பெருகிப் புகுந்து, சிறு பனி போலாகச் செறிந்து, பின் உலகிற் கேற்கப் பெருகி வீழ்தல்; "சலமுகத்தா லவன்சடையிற் பாயுமது" (திருவா - சாழல்?).
பொலம்புரி நூல்மணி மார்பர் - பொலம் - அழகு; மணி - நவமணி மாலைகள்; "மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க" (165); "சுடர்மணிக் கலன்கள் சாத்தி" (330); "மெய்யினிற் றுவளு நூலும்" (331) என்றபடி திருமணக்கோலத்துடனே சரிப்பவர் நம்பிகள்.
போவார் தொழுது - கடந்தே - எய்தினார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.