பாடல் எண் :3326

தண்டகமாந் திருநாட்டுத் தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டரெதிர் கொண்டணையத் தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை வளமருதம் பலகடந்தே
எண்டிசையோர் பரவுதிருக் கழுக்குன்றை யெய்தினார்.
172

(இ-ள்.) தண்டகமாந் திருநாட்டில்...போய் - திருத்தொண்டை நன்னாட்டிலே ஒப்பற்ற இடபத்தையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும், அங்கங்கும் திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு அழைத்துக்கொண்டு உள்ளே செல்லத், தொழுதபடியே சென்று; தூயநதி....கடந்தே - தூய நீரினையுடைய ஆறுகளும், வண்டுகள் சந்திக்கும் பூக்களையுடைய முல்லைப்புறவு நிலங்களும், மலைகளும் மருத நிலங்களும் ஆகிய பலவற்றையும் கடந்து சென்றே; எண்டிசையோர்...எய்தினார் - எண்டிசையோர் - எட்டுத்திசைகளினுமுள்ள மக்களும் துதித்துப் பாராட்டும் திருக்கழுக் குன்றத்தினை அடைந்தருளினர்.
(வி-ரை.) தண்டகமாந் திருநாடு - தொண்டை நாடு; (2858 பார்க்க.)
தனிவிடையார் - தனி - ஒப்பற்ற; ஒன்று என்றலுமாம். "ஊர்வதோர் விடையொன் றுடையானை" "நரைவெள்ளே றொன்றுடை யானை" (தேவா).
மகிழ் விடங்கள் தொழுது - இவை திருப்புறவார் பனங்காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின என்பது கருதப்படும். இவற்றுள் முன்னையவிரண்டும் நடுநாட்டுத் தலங்கள்; திருநாவலூரினின்றும் திருக்கழுக்குன்றம் செல்லும் வழியிடையில் உள்ளன.
நதி - புறவு - மலை - வளமருதம் - பல - நதியும், புறவும், மலையும், மருதமும் ஆகிய பலவற்றையும் என்று எண்ணும்மை விரிக்க; நதி - பெண்ணையாறு, வராகநதி பாலாறு முதலியன: புறவு - இடையே பரந்துகாணும் சிறுகாடுகள்; மலை - திண்டிவனம், செஞ்சிமலை, அச்சிறுபாக்கம்.
திருவெண்குன்றம் முதலியவற்றின் தொடர்பாய்அங்கங்கும் சிதறிக் காணும் சிறு குன்றுகளின் வெளி.
வள மருதம் - வளம் - அடைமொழி, முன்கூறிய இடையில் உள்ள ஏனைப் புறவுமலை முதலியவை அத்துணை வளமுடையனவல்ல என்ற குறிப்புடன் நின்றது; மருதம் - நாட்டின் பகுதி.
எண்டிசையோர் பரவு - எல்லாத் திசையினின்றும் மக்கள் வந்து வழிபடும் நிலை குறித்தது; இது இந்நாளினும் கண்கூடாகக் காணப்படும் உண்மை. தலவிசேடம் பார்க்க. III - பக்கம் 559.