பாடல் எண் :3328

பாடியவப் பதியின்க ணினிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடுந் திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூ ழாலக்கோ யிலினமுதைக்
கூடியமெய் யன்புருகக் கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
174

(இ-ள்.) பாடிய....போய் - முன் கூறியவாறு பாடிய அந்தப் பதியினிடத்து இனிதாக விரும்பிச் சிலநாள் எழுந்தருளியிருந்து வணங்கி அருள்விடைபெற்றுச் சென்று; நாடிய...நண்ணி - இறைவரையே நாடியிருக்கும் நல்ல உணர்வினோடு திருக்கச்சூரினை அடைந்து, ஆடகமாமதில்....புறத்தணைந்தார் - பொன் வேலைப்பாடமைந்த பெரிய மதில் புடையிலே சூழ்ந்த திரு ஆலக்கோயிலில் எழுந்தருளிய அமுதம் போன்ற இறைவரைக்கூடிய மெய்யன்பினாலே உள்ளமுருகக் கும்பிட்டுப் புறத்திலே அணைந்தருளினர்.
(வி-ரை.) பாடிய - பாடப்பட்ட என்று பிறவினையாகக் கொள்க. பாடுதற்கிடமாகிய - பாடுதற்குப் பொருளாகிய என்றலுமாம். பாடிய அப்பதி - அத்திருப் பதிகம் "இடம் - கழுக் இனிதமர்ந்து - சிலநாள் என்பது இசையெச்சம்.
நாடிய நல்லுணர்வு - சிவனையே உள்ளத்தில் எப்போதும் நாடிக் கண்டு கொண்டிருந்த நல்ல உணர்வு; "நாடிய அன்பொடு" (4325) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; சிவயோகத்திற் றிளைக்கும் உள்ளுணர்வு.
நாடிய...நண்ணி - சிவயோக நினைவினில் அழுந்திய உணர்ச்சியோடு சென்றாராதலின் உலகியல் நிகழ்ச்சிகளை மறந்த நிலையினின்றார் என்பதாம்; பின்னர் நம்பிகளைத் தொடர்ந்தோ அன்றி முன்சென்றோ நிற்கும் முறையினையுடைய பரிசனங்கள் நம்பிகள் திருக்கோயிலினில் வழிபட்டுப் புறத்தணைந்தபின் அமுதுசெய்யும் பொழுதாகவும் குறுகாராயினர் எனவரும் மேற் சரித வரலாற்றுக்குக் காரணம் உணர்த்தப்பட்டது; நம்பிகள் உலகை மறந்த யோகத்திற் சிவனைக் கண்டுகொண்டவாறே விரைவிற் சென்றருளினர் என்பதாம்.
ஆடகம் - பொன்னாலியன்ற வேலைப்பாடுடைய மதிற் பகுதிகள்.
ஆலக்கோயிலின் அமுதை - கச்சூர் - ஊர்ப்பெயரும், ஆலக்கோயில் - கோயிலின் பெயருமாம்; பூங்கோயில், பெருங்கோயில் என்றாற்போல்; அமுது - என்றது பின்னர்ப் பசிதீர நம்பிகளுக்குக் கருணையினால் அமுதளித்தருளும் வரலாற்றுக் குறிப்புப்படக் கூறியதாம். ஆலக்கோயிலுளிருப்பினும் அவர் அமுதமேயாவர் என்ற நயம்படக் கூறியதுமாம். (ஆலம் - விடம்.)
கூடிய - மனத்துள்ளே கண்டவாறே புறத்திலும் கிடைக்கும்படி வந்துகூடிய.