வன்றொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார் மின்றங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி அன்றங்கு வாழ்வாரோ ரந்தணராய்ப் புறப்பட்டுச் சென்றன்பர் முகநோக்கி யருள்கூரச் செப்புவார், | 176 | (இ-ள்.) வன்றொண்டர் பசிதீர்க்க - வன்றொண்டரது பசியினைத் தீர்க்கும் பொருட்டு மலையின்மேல் மருந்தானார் - மலையின்மேல் உள்ள மருந்து ஆகிய இறைவர்; மின்தங்கு...புறப்பட்டுச் சென்று - ஒளியுடைய வெண்டலையாகிய கபாலமாகிய பலிப்பாத்திரத்தை ஒழித்து வெறும் ஒரு திருவோட்டினை ஏந்திக் கொண்டு அன்று அவ்வூரில் வாழ்பவராகிய ஒரு அந்தணர்போலக் கோலங் கொண்டு புறப்பட்டுப் போய்; அன்பர்முக நோக்கிச் செப்புவார் - அன்பராகிய நம்பிகளது முகத்தைப் பார்த்துச் சொல்லுவாராய், (வி-ரை.) மலையின்மேல் மருந்தானார் - மலைகளில் உள்ள மருந்துகள் சிறந்த குணமுடையவை எனப்படும். இங்குப் பசிநோய் தீர்த்தலின் இறைவரை மருந்தென்ற துருவகம். முன்னர் அமுது - (மரணந் தவிர்ப்பது) (3328) என்றதும் காண்க; இங்கு இறைவர் மலையின்மேல் எழுந்தருளியிருப்பதும் குறிப்பு; மருந்தானார் - ஆக்கச்சொல் இயல்புகுறித்த அளவில் நின்றது. "மலையின்மேல் மருந்தே" (பதிகம். 5) என்ற பதிக ஆட்சி போற்றப்பட்டது. வெண் தலை ஓடு ஒழிந்து - இறைவர் பலியேற்கும் பலிப்பாத்திரம் பிரம கபாலமாகிய மண்டையோடு என்பர்; இங்கு அதனை விட்டு என்க. ஒரு வெற்று ஓடு - வெறும் ஓர் ஓடு; உலகர் அறியாமைப் பொருட்டு வெற்றோடேந்தி வந்தார். அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் - அன்று - காலம்; அங்கு - இடம். வாழ்வார் - வாழ்பவராகிய; அவ்வூராராகிய; அந்தணராய் - அந்தணர் வேடம்பூண்டு; அந்தணர் போல. புறப்படுதல் - மறைந்த நிலையினின்றும் வெளிப்படுதல்; 3334-ம் பார்க்க. முக நோக்கி - பசியின் வருத்தமும் இளைப்பும் முகத்தின் பொலிவினாற் றெரிந்தார் போன்று நோக்கிக் கூறுவார். அருள்கூர - அருள் மிகத் தோன்ற; "ஓதக்கண்டேன்" (9) என்றது பதிகக் குறிப்பு; ஓதல் - அருள்மொழி கூறல். செப்புவார் - செப்புவாராகி; முற்றெச்சம்; செப்புவார் - செப்பி - இரப்பார் - புக்கு - கொண்டு - கொண்டுவந்தார் என்று இம்மூன்று பாட்டுக்களையும் சேர்த்து வினைமுடிபு கொள்க. ஒரு வேற்றோடு - என்பதும் பாடம். |
|
|