"மெய்ப்பசியான் மிகவருந்தி யிளைத்திருந்தீர்; வேட்கைவிட இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்; அப்புறநீ ரகலாதே சிறிதுபொழு தமரு"மெனச் செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறுஞ் சென்றிரப்பார், | 177 | (இ-ள்.) மெய்ப்பசியால்...இளைத்திருந்தீர்; மெய்யால் வரும் பசியினால் மிகவருந்தி இளைப்படைந்திருந்தீர்; வேட்கைவிட...கொணர்கின்றேன் - உமது பசித்தாபம் நீங்கும்படி இப்பொழுதே சோறு இரந்து இங்கு உமக்குக் கொண்டு வருகின்றேன்; அப்புறநீர்...அமரும் எனச்செப்பி - நீர் இங்கு நின்றும் அப்புறம் நீங்காமல் சிறிது நேரம் இங்கு அமர்ந்திரும்ழு என்று சொல்லி; அவர்....இரப்பார் - அவ்வந்தணர் திருக்கச்சூரின் மனைகள் தொறும் போய் இரப்பாராகி; (வி-ரை.) "மெய்ப்பசியால்...அமரும்" என - இஃது இறைவர் நம்பிகளை முகநோக்கிக் கூறியது; நம்பிகளது பசியின் முடுகிய நிலையினைத் தாம் அறிந்துகொண்ட தன்மையினையும், ஆதலின் அதற்கேற்பச் சோறு கொணர்தல் மிக விரைவில் நிகழும் நிலையினையும், வேறெங்கும் போந்தால் தாமதமும் மேலும் இளைப்பும் உளதாம் என்று தாம் அளிகூரும் தன்மையினையும் புலப்படுத்தக் கூறியபடி காண்க. மெய்ப்பசி - மெய் - உடம்பு; உடம்பின் உபாதிகளுள் ஒன்றாகிய பசி; நோய் கொண்டார்பால் சிலபோது பசியெனப் போலித்தோற்ற முண்டாவது போலன்றி, உண்மையான பசியின் நிலை; இப்பொழுதே - விரைவு, நம்பிகளை ஆற்றுவிக்கும் குறிப்பு. சோறு இரந்து - அந்தணர் மனைகளில் உச்சிப்போதிற் பிரமசாரிகள் முதலாயினோர் சோறு இரக்கும் வழக்குண்மை புலப்படுத்துதல் காண்க; வழக்குண்மையாலே தான் நம்பிகள் ஐயப்படாது உடன்பட்டிருந்தருளினர் என்க. அகலாதே....அமரும் - சிறிது பொழுது - தாம் தாமதமின்றி விரைவில் வரும் குறிப்பு; அப்புறம் அகலாது - என்றதும் வேகமாய் வந்துஅவரைக் கண்டுகொள்ளுதல் பிழையாத இடம் குறித்தன. மனைதோறும் சென்றிரப்பார் - அந்தணர்கள் மனைகள்தோறும் என்க; "ஊரூர்திரிய" - பதிகம். வேட்கைவிட - வேட்கை - சோற்றின் விருப்பம்; விட - நீங்க. |
|
|