வெண்டிருநீற் றணிதிகழ விளங்குநூ லொளிதுளங்கக் கண்டவர்கண் மனமுருகக் கடும்பகற்போ திடும்பலிக்குப் புண்டரிகக் கழல்புவிமேற் பொருந்தமனை தொறும்புக்குக் கொண்டுதாம் விரும்பியாட் கொண்டவர்முன் கொடுவந்தார். | 178 | (இ-ள்.) வெண்திருநீற்று....துளங்க - வெள்ளிய திருநீற்றின்அழகு விளங்கவும், விளங்கிய முந்நூலின் ஒளி அசைந்து வீசவும்; கண்டவர்கள் மனமுருக - காணப்பெற்றவர்கள் மனமெல்லாம் உருகவும்; கடும் பகற்போது....பொருந்த - கடிய உச்சிப்போதில் இடப்பெறும் பிச்சைக்காகத் தாமரைபோன்ற திருப்பாதங்கள் நிலத்தின்மேற் பொருந்தவும்; மனைதொறும் புக்குக்கொண்டு - வீடுகள்தோறும் சென்று சென்று இரந்த சோற்றினை எடுத்துக்கொண்டு; தாம்...கொடுவந்தார் - தாமே விரும்பித் தடுத்து ஆட்கொண்டருளிய நம்பிகள் முன்கொண்டுவந்தருளினர். இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. இறைவர் ஓர் அந்தணராய் வந்ததும், நம்பிகளிடம் சொல்லிச் சென்றதும், சோறிரந்து கொடு வந்ததும் விரைந்து தொடர்ந்து நிகழ்ந்த செய்திகளாதலின் இம்மூன்று பாட்டுக்களையும் ஒரு முடிபுபடக் கூறிய கவிநயம் கண்டுகொள்க. (வி-ரை.) வெண் திரு நீற்று...துளங்க - திருநீறும் புரிநூலும் சைவ அந்தணரின் தோற்றமாகிய அடையாளம்; திகழ - துளங்க - மிக விளக்கமாகக் கண்டோர் மனங் கவர; துளங்குதல் - உடலசையுந்தோறும் பூணூலும் துவண்டு அசைதல். கண்டவர்கள் மனமுருக - "கண்டா லடியார் கவலாரே" "ஊரூர் திரியக் கண்டா லடியார் உருகாரே"- (பதிகம்) கடும் பகற்போது - "உச்சம்போது" - (பதிகம்) கடும் பகற்போது இடும்பலிக்கு - மனை வாழ்வினர், ஒருவர் வந்து கேளாமல்தாமாகவே உச்சிப்போதில் பலியிடும் மரபும் குறித்தது. புண்டரிகக் கழல் புவிமேற் பொருந்த - வெயிலில் கால்தேய நடந்து சென்று. புக்கு கொண்டு - (வீடுதோறும்) உள்ளே புகுந்து இடும் பலியினை ஓட்டிற் கொண்டு. தாம் விரும்பி யாட்கொண்டவர்பாற் கொடுவந்தார் - சோறிரந்தும் கொடுவந்ததன் காரணம் தாம் விரும்பி வலிய ஆட்கொண்டமையால் எனக் கூறியபடி. |
|
|