வாங்கியவத் திருவமுது வன்றொண்டர் மருங்கணைந்த ஓங்குதவத் தொண்டருட னுண்டருளி யுவந்திருப்ப ஆங்கருகு நின்றாற்போ லவர்தம்மை யறியாமே நீங்கினா ரெப்பொருளு நீங்காத நிலைமையினார். | 180 | (இ-ள்.) வாங்கிய...உவந்திருப்ப - மறையவனார் அளிப்ப அவ்வாறு வாங்கிய அத்திருவமுதினை வன்றொண்டராகிய நம்பிகள் தம்பக்கல் அணைந்த மிக்க பெருந்தொண்டர்களுடனேகூடத் திருவமுது செய்தருளி மகிழ்ந்திருக்க; ஆங்கருகு நின்றார்போல் - அங்கு அருகிலே நின்றவர் போலவே; அவர் தம்மை...நிலைமையினார் - எந்தப் பொருளினின்றும் நீங்கலாகாத முழுநிறைவுடைய நிலைமையினாராகிய அம்மறையவர் தம்மை அவ்வன்றொண்டர் அறியாதபடி அங்கு நின்றும் மறைந்தருளினார். (வி-ரை.) வாங்கிய அத்திருவமுது - வாங்கிய - முன்கூறியபடி தொழுது வாங்கிய; அகரம், மறையவனார் இரந்து கொடுவந்து அருந்துவீர் என அளிக்கத்தாம் வாங்கிய என முன்னறிசுட்டு; அமுது - அமுதினை; இரண்டனுருபு விரிக்க; அமுதினை - உண்டருளி என்க. மருங்கு அணைந்த ஓங்குதவத் தொண்டருடன் - முன்னர்த் திருக்குருகாவூரில் உடன் வந்தணைந்ததுபோல ஈண்டும் நம்பிகள் மருங்கு அங்குத் தொண்டர் வந்தணைந்தனர் என்க; ஓங்கு தவம் - நம்பிகளின் பொருட்டு இறைவரே கடும்பகற்போது பாதம் வருந்த மனைதோறும் சென்று இரந்த சோற்றினை, அவர் உண்பது போலவே தாமும் உண்ணும் பேறு பெரிய மிக்க முன்னைத் தவத்தானன்றி இயலாதென்பது குறிப்பு. தொண்டருடன் உண்டருளி - அன்பர்களாவார் தொண்டர்களுடனன்றித் தனித்துண்ணலாகா தென்பது குறிப்பு. "கண்ணுதற் கன்ப ரோடும், விதிமுறை தீபமேந்தி மேவுமின் னடிசி லூட்ட" (851); "ஈங்கு நமக்குத் தனியுண்ண வொண்ணா தீச னடியாரிப், பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்" (சிறுத். புரா. 76) என்பன முதலியவை பார்க்க; முன்னர்த் திருக்குருகாவூரிலும் "பொதிசோறதுவாங்கிச், சென்றதிருத் தொண்டருடன் றிருவமுது செய்தருளி" (3314) என்றதும் கருதுக. ஆங்கருகு நின்றார்போல் அவர்தம்மை அறியாமே நீங்கினார் - அங்கு நின்றவர் போல இருந்த மறையவர்; நின்றவர்போலிருந்தவாறே மறைந்தனர். போல் நீங்கினார் - அருகு நின்றபோதும் அவர் இன்னாரென்று அறியவில்லை; அதுபோலவே அவர் நீங்கினபோதும் உருக் காணவில்லை. தம்மை அவர் அறியாமே - அவர் - நம்பிகள்; அவர் தம்மை அறியாமே அருகு ஆங்கு நின்றார் என்றும், அவர் தம்மை அறியாமே ஆங்கு நீங்கினார் என்றும் முன்னும் பின்னுமாக ஈரிடத்தும் கூட்டுக. நேரில் நின்றபோது காண இயலாது, மறைந்து நீங்கியபோது அவர்தான் எனக் காணச் செய்வது இறைவரது அருட்டிறம்; "மறையவனா ரிறையவனா ரெனமதித்தே" என மேற்பாட்டிற் கூறுதல் காண்க. அறியாமே நீங்கினார் எப்பொருளும் நீங்காத நிலைமையினார் - நீங்கினார் - வெளிப்பட்ட நிலையினின்றும் மறைந்த நிலையில் நின்றார் என்பது பொருள்; எங்கும் நிறைந்தவர் இறைவராதலின் நீங்கமாட்டாதவர் ஆதலின் வெளி உருவம் காட்டாது மறைந்தனர் என்று கொள்க என எச்சரிப்பார் போன்று "எப்பொருளும் நீங்காத நிலைமையினார்" என்று அறிவித்தமை ஆசிரியரது தெய்வக்கவிநலம். நீங்கினார் - நீங்காத நிலைமையினார் - முரண் அணிச் சுவைபடக் கூறியபடியுமாம். |
|
|