பாடல் எண் :3335

திருநாவ லூராளி சிவயோகி யார்நீங்க
வருநாம மறையவனா ரிறையவனா ரெனமதித்தே
"பெருநாதச் சிலம்பணிசே வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி யெழுந்தருளிற் றென்பொருட்டா" மெனவுருகி,
181

(இ-ள்.) திருநாவலூராளி....மதித்தே - சிவயோகியாராய் மறையவர் வேடங் கொண்டுவந்த இறைவர் மறைந்து நீங்கத் திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள் முன்வந்த புகழுடைய மறையவனார் இறையவனாரேயாவர் என்று துணிந்து; பெருநாதச் சேவடி...உருகி - பெரிய நாதமுடைய சிலம்பினை அணிந்த செம்மையாகிய திருவடியிணை வருந்த உச்சிப்போதில் உருவு தாங்கி என்பொருட்டாக எழுந்தருளி நடந்து எழுந்தருளிற்றே! என்று மனமுருகி,
(வி-ரை.) சிவயோகியார் - மறையவராய் வந்த சிவபெருமான்; யோகம் - கூடுதல்; சிவயோகியார் - அந்தணர் வேடத்துடன் கூடியசிவபெருமான்.
நாமம் - புகழ்; நாமமறையவனார் - பெயர் மாத்திரையால் மறையவரெனப் பட்டார் என்ற குறிப்புமாம்.
மதித்தே - கண்ட செயல்களால் காணாத சிவனைத் துணிந்தே; மதித்தல் - காரணங்களால் பொருணிச்சயம் செய்தல்.
பெருநாதச் சிலம்பு - நாதம் - சுத்த மாயையாகிய குடிலை; பெருமையாவது மறை முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாயிருத்தல்; இச்சிலம்பொலிவழியே சென்றால் சிவனை அடையலாம் என்று "திருச்சிலம் போசை ஒலிவழி யேசென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற" என ஞானசாத்திரம் முழக்குதல் காண்க. திருச்சிலம்போசை கேட்கப் பெற்றதனாலே கழறிற்றறிவார் நாயனார் இறைவரது திருவருள் கூடிய துணிபிணைத் தினமும் பெற்றுவந்த வரலாறும் கருதுக.
பெருநாத...பொருட்டாம் - "கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென், றுச்சம் போதா லூரூர் திரியக் கண்டா லடியா ருருகாரே" என்ற பதிகக்கருத்து; ஈண்டுப் "பெருநாதச் சிலம்பணி சேவடி" என்று நாதச் சிலம்பு பற்றிக்கூறியது, "இவர் இறைவர் தாமே" என்று காணத் துணையாயிருந்தமை குறிப்பா லுணர்த்தற் கென்க.
பெரும் பகல் - நண்பகல்; "உச்சம் போதால்" பதிகம்
உருநாடி - "ஒருநாம மோருருவ மொன்றுமில்லா"த இறைவர் மறையவராகிய ஓர் உருவத்தை மேற்கொண்டு; அகண்டிதமாகியவர் கண்டிதப்படக் காணப்பட்டு.
எழுந்தருளிற்று - எழுந்தருளிய பெரிய அருள் இருந்தவாறு தானென்னே என்று அதிசயப்பட்டது.
என் பொருட்டாம் - மிக எளியவனாகிய என் பொருட்டு என்பது.
என் பொருட்டா மெனவுருகி - அவரது அளவிடற்கரிய பெருமையும் தமது அளவிடற்கரிய சிறுமையும் எண்ணவே மனமுருகி; "இத்தனையு மெம்பரமோவைய வையோ வெம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே" (தேவா).