பாடல் எண் :3336

"முதுவா யோரி" யென்றெடுத்து முதல்வ னார்தம் பெருங்கருணை
"யதுவா மிது"வென் றதிசயம்வந் தெய்தக் கண்ணீர் மறையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம் புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவா ரிதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.
182

(இ-ள்.) முதுவாயோரி...இதுவென்று - முதுவாய் ஓரி என்று தொடங்கி, இறைவனாரது பெருங் கருணைத் திறம் அதுவேயாகும் இச்செயல் என்ற கருத்துடன்; அதிசயம் ...போற்றிசைத்து - அதிசயம் பொருந்தக்கண்ணீர் மழை யருவிபோலப் பெருக, வார்ந்த அப்புதுப் புனலில் திருமேனி முழுதும் மயிர்க்கூச்சினாலே மூடத், திருப்பதிகம் பரவித் துதித்து; மதுவார்...வணங்கினார் - தேன் பொருந்திய கொன்றை சூடிய முடியினையுடைய சிவபெருமானைப்பாடி மகிழ்ச்சி பொருந்த வணங்கினார்.
(வி-ரை.) "முதுவாய் ஓரி" என எடுத்து - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
"முதல்வனார்தம்...இது" என்று - இது பதிகக்கருத்தாகிய குறிப்பு.
"அதுவேயாமா றிதுவோ" என்ற பதிகத்துப் பொருள் காட்டியவாறு.
பெருங்கருணை - முன் பாட்டிற் கூறிய செயல்கள் கருணைத் திறத்தை எடுத்துக் காட்டின; சேவடி வருந்த வருதல், உருவெடுத்து வருதல், பெரும் பகற்கண்வருதல், மனைதோறும் சென்று வருதல், மிகப் பசித்தீர் என்று இன்மொழிகூறிச்சோறு கொண்டுவந்து ஊட்டுதல், "ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற், கிரப்பி னிளிவந்த தில்" (குறள்) என்று வகுத்த இழிவுபடும் இரப்புத் தொழிலும் செய்தல் முதலாயின.
அதிசயம் - இத்துணையும் அடியான் பொருட்டு ஆண்டான் செய்தமை உணர்ந்ததனால் வரும் பெருமிதமாகிய மனநிலை.
கண்ணீர் மழையருவிப் புதுவார் புனலின் - மிக்க கண்ணீர் பொழிதலினால் உடல் முழுதும் நனைதல் குறித்தது.
புனலின் மயிர்ப்புளகம் புதைய - புளகம்படச் சிலிர்த்துநின்ற மயிர், கண்ணீர் அருவியினால் நனைந்து கவிய.
கண்ணீர் மழையும் புளகமும் - அதியத்தின்கண் வந்த மெய்ப்பாடுகள்.
போற்றிசைத்து - வாக்கின் றொழில். மகிழ்ந்து - இவ்வாறு மன மெய்ம்மொழி என்ற மூன்றினாலும் வழிபட்டதனால் வரும் ஆனந்தம்.