பாடல் எண் :3337

வந்தித் திறைவ ரருளாற்போய் மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப் புக்கு முக்கட் பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல் பணிந்துசெஞ்சொற்றொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியா ரமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
182

(இ-ள்.) வந்தித்து...போய் - வணங்கி இறைவரது அருள்விடை பெற்று அங்கு நின்றும் போய், மங்கை பாகர் மகிழ்ந்த இடம் - உமைபாகராகிய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் பிறபிதிகளை; முந்தி...புக்கு - அங்கங்கும்முன்பு தொண்டர்கள் வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்லப்புகுந்து; முக்கட் பெருமானைச் சிந்தித்திட...புனைந்தே - நினைக்க முன்வந்து அருள்புரியும் முக்கட்பெருமானது திருவடிகளைப் பணிந்து செஞ்சொற்றொடை மாலைகளாகிய திருப்பதிகங்களைப் பாடியருளி; அந்தி....மருங்கணைந்தார் - மாலைச் செவ்வந்தி போலும் பெருகும் ஒளி பொருந்திய திருமேனியினையுடைய திருவேகம்பவாணர் விரும்பி எழுந்தருளியுள்ள திருக்காஞ்சிபுரத்தின் பக்கம் வந்தணைந்தனர்.
(வி-ரை.) வந்தித்து - முன் கூறியபடி வணங்கி; வந்தித்தல் - என்பது நன்றி பாராட்டும் வகையில் செய்யும் வணக்கம் என்ற குறிப்புடன் நின்றது; அருளால் - அருள் விடைபெற்று; போய் - மேலே மேற்றிசை நோக்கிச் சென்று.
மங்கை பாகர் மகிழ்ந்த இடம் - இறைவர் மகிழ்ந்து அருளிய பிற பதிகள். இவை திருக்கச்சூராலக் கோயிலுக்கும் திருக்காஞ்சீபுரத்துக்கும் இடையில்பாலாற்றின் கரையிலும் கரை அணிமையிலும் உள்ளன; இவை பாலாறும் சேயாறும் கூடுதுறையில் உள்ள திருமுக்கூடல், திருவில்வலம், திருமாகறல், திருக்குரங்கணின் முட்டம் முதலியன என்பது கருதப்படும்.
சிந்தித்திட வந்து அருள்செய் பெருமானைக் கழல்பணிந்து - என்று கூட்டுக.
சிந்தித்திட வந்தருளும் கழல் - என்று வருதல் திருவடியின் செயலாகவைத்து உரைப்பினுமமையும்; சிந்தித்திட - நினைத்த அளவில்; திருவருளின் விரைவு குறித்தது; சிந்தித்தல் - ஒன்றே திருவருள் பெறுதற்கு மூலம் என்பதாம். சிந்தித்திடவே என்க; "ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்றே - அடித்தாமரை சென்று சேர்வதற்கே" (கழுமல - மும்- கோவை 12.)
செஞ்சொற்றொடை - திருப்பதிகங்கள்; இவை கிடைத்தில.
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் - அந்திச் செக்கர் வானம்போலும் திருமேனியின் பெருகும் ஒளி; பெருகும் - அந்திச் செக்கர் ஒளி காலம் செல்லச் செல்லச் சிறுகிக் கழிந்து இருள் பரவும்; இறைவர் திருமேனி செக்கர்அவ்வாறன்றி நினைப்பின் அளவுக்கேற்பப் பெருகும் என்பதாம்.