"அன்று வெண்ணெய் நல்லூரி லரியு மயனுந் தொடர்வரிய வென்றி மழவெள் விடையுயர்த்தார் வேத முதல்வ ராய்வந்து நின்று சபைமுன் வழக்குரைத்து நேரே தொடர்ந்தாட்கொண்டவர்தாம் இன்றிங்கெய்தப்பெற்றோ"மென்றெயில்சூழ்காஞ்சிநகர்வாழ்வார், | 184 | (இ-ள்.) வெளிப்படை. திருமாலும் பிரமதேவனும் தொடர்ந்து அறிதற்கரியவராய் நீண்டு நின்ற வெற்றியுடைய இளைய இடபத்தைக் கொடிமேல் உயர்த்திய இறைவர் முன்னாளில் அன்று திருவெண்ணெய் நல்லூரிலே வேதியர் தலைவராக வெளிவந்து நின்று சபையார் முன்பு வழக்குப் பேசி, நேரே முன்னைத் தொடர்புபடத் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவராகிய நம்பிகள் தாமே இன்று இப்பதியினில் எழுந்தருளும் பெரும்பேறு பெற்றோம்" என்று உட்கொண்டு மதில் சூழ்ந்த காஞ்சிபுர நகரில் வாழ்வார்கள், (வி-ரை.) இப்பாட்டினால் நம்பிகளின் நல்வரவு கேட்ட காஞ்சிபுர நகர மாந்தரின் மிக்க மன மகிழ்ச்சியும் அதன் காரணமும் கூறப்பட்டது. மேல் வரும் பாட்டினால் அம்மகிழ்ச்சியாகிய மனநிலை புறச் செயல்களாக உருப்பட்ட நிலை கூறப்பட்டது. "அன்று....பெற்றோம்" என்று - இது காஞ்சி நகர வாணர்கள் மனத்துள் எண்ணி மகிழ்ந்த கருத்து. அன்று - உலக மறியவந்த முன்னை ஒரு நாள்; உலகமறிசுட்டு; நாடிக்காணமாட்டாப் பொருள் நேரில் தாமே உலகர் யாவரும் காணும்படி வந்து; நம்பிகளதுசரித வரலாறுகளில் இறைவர் நேரே வந்து வழக்குரைத்து நம்பிகள் மறுக்கவும் ஆளாகக் கொண்ட பகுதியே மக்களது உள்ளத்தைக் கொள்ளைகொண்டுஅவரைப் போற்ற நின்றது; அரசுகள் சரிதத்தில் சூலை தந்து நேரே யாட்கொண்டருளிய பகுதி மக்களை அவர்பாற் பிணித்தமை போல; "நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளி நேரே முன்னா, ளாண்டவரசு" (1446) என்று ஆளுடைய பிள்ளையார் உட்கொண்டமை காண்க. வேத முதல்வராய் - மறைபயிலும் அந்தணர் பெருமானாக. தொடர்ந்து - கயிலையில் செய்த முன்னை அடிமைத் திறத்தினால் அதனையே தொடர்ந்து. ஆட்கொண்டவர் - ஆட்கொள்ளப்பட்டவர். பிறவினை தன்வினையாக வந்தது; தாம் - தாமாகவே. எய்தப் பெற்றோம் - எய்தும் பெரும்பேறு பெற்றோம். |
|
|