மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக, மருகு மணித்தோ ரணநாட்டி அல்கு தீப நிறைகுடங்க ளகிலின் றூபங் கொடியெடுத்துப் செல்வ மனைக ளலங்கரித்துத் தெற்றி யாடன் முழவதிரப் பல்குதொண்டருடன்கூடிப் பதியின்புறம்போயெதிர்கொண்டார். | 185 | (இ-ள்.) வெளிப்படை. பொருந்திய மகிழ்ச்சி மேலும் மிகப்பெருக வீதிகளில் அழகிய தோரணங்களை நாட்டியும், பெருகும் தீபங்களும் நிறைகுடங்களையும் அகிலின் தூபங்களையும் கொடிகளையும் ஏந்தியும், செல்வமுடைய மனைகளை அலங்கரித்தும், தெற்றிகளில் ஆடல் முழவுகள் சத்திக்கப், பெருகியதொண்டர்களுடனே கூடி அப்பதியின் புறத்திலே போய் நம்பிகளை எதிர்கொண்டனர். (வி-ரை.) மணித்தோரணம் - மணி - அழகிய; மணி மாலைகள் தூக்கிய என்றலுமாம். அல்குதீபம் - ஒளிமிகும் விளக்குக்கள்; அல்குதல் - பெருகுதல்; நிறைகுடம் - புண்ணிய நீர் நிறைந்த குடங்கள், பூரண கும்பங்கள் என்பர். எடுத்து - தீபம், குடம், தூபம், கொடி இவற்றை ஏந்தி. தெற்றி - சித்திரக்கூடங்கள்; முற்றத்தில் நீண்ட திண்ணைகள் என்றலுமாம். ஆடல் முடிவு அதிர்தல் - மங்கலங் காட்டும் உபசார வகைகளுள் ஒன்று; "நடமாட முழவதிர, தேந்தாமென்று அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும்"; (தேவா); ஆடல் முழவு - ஆடலுக் கேற்ப முழக்கும் முழவு; ஆடலும் முழவும் என்றலுமாம். பல்கு தொண்டர் - பல்குதலாவது சரியை வகைகள் முதலாகப் பற்பல தொண்டுகளிலும் பயிலுதல்; தொண்டர்கள் என்ற இவர்கள் வேறு; முன்கூறிய படி மங்கலஞ் செய்த காஞ்சி நகர வாழ்வார் வேறு; அவர்கள் நகர மாந்தர். வாழ்வார் தொண்டருடன் கூடி - எதிர் கொண்டார் - என்க; சிறப்புப்பற்றி உடன் உருபைத் தொண்டர்களுடன் சேர்த்து ஓதினார். |
|
|