ஆண்ட நம்பி யெதியர்கொண்ட வடியார் வணங்க வெதிர்வணங்கி நீண்ட மதிட்கோ புரங்கடந்து நிரைமா ளிகைவீ தியிற்போந்து பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனைமங் கலதூ ரியமொலிப்ப ஈண்டு தொண்டர் பெருகுதிரு வேகாம் பரஞ்சென் றெய்தினார். | 186 | (இ-ள்.) ஆண்ட...வணங்கி - இறைவரால் தடுத்தாட் கொள்ளப்பட்ட நம்பிகள் தம்மை எதிர்கொண்டு அழைத்த அடியார்கள் வணங்க; அவர்களைத் தாமும் எதிர் வணக்கம் செய்து; நீண்ட...போந்து - நீண்ட மதிலையும் கோபுரத்தையும் கடந்து வரிசையாகிய மாளிகைகள் பொருந்திய மாடவீதியிற் போய்; பூண்ட....ஒலிப்ப - மேற்கொண்ட பெருவிருப்பத்தோடு பொருந்திய மங்கல இயங்கள் ஒலி செய்ய; ஈண்டு...எய்தினார் - நெருங்கிய தொண்டர்களின் கூட்டம் பெருகும் திருவேகாம்பரத் திருக்கோயிலினைச் சென்று அடைந்தருளினார். (வி-ரை.) எதிர்கொண்ட அடியார் வணங்க - நம்பிகளும் எதிர் வணங்கி என்க; நம்பிகள் வணங்கி என்ற வாக்கியத்தினுள் அடியார் வணங்க என்றுவைத்துக்கூறிய தமிழ்நயம், நம்பிகள் அடியார்களை வணங்க முற்பட, அவர் அவ்வாறுவணங்குமுன் அடியார்கள் வணங்க, அதனால் நம்பிகளின் வணக்கம் எதிர்வணக்கமாயிற்று என்ற குறிப்புடன் நின்றது; "வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன்வன்றொண்ட ரஞ்சலி கூப்பி வந்து" (269) என்று திருவாரூரில்அடியவர் எதிர் கொண்டது பற்றிக் கூறியதும், "அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியா ரவர்களோ நம்பி யாரூரர் தாமோ, முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமை யாலெதிர் வணங்கி" (244) என்று திருத்தில்லையில் அடியார்கள் எதிர்கொண்ட முறைபற்றிக் கூறியதும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. நீண்ட - என்பதனைக் கோபுரத்துடனும் கூட்டுக. நிரை மாளிகை வீதி - வரிசையாக விளங்கும் மாளிகைகளையுடைய மாடவீதி; இறைவர் திருத்தேர் விழாவில் உலாப் போதும் திருவீதி. வாழ்த்தினுடன் தூரியம் ஒலிப்ப - காதல் வாழ்த்தினுடன் ஒத்தியைந்து மங்கலப் பொருள் புலப்படுத்துதலால் தூரியம் ஒலிப்ப என்றார். காதல் வாழ்த்து - நம்பிகள்பாற் கொண்ட காதலால் மக்கள் வீதியில் இருமருங்கும் வாழ்த்தும் ஒலி. ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் - ஈண்டுதல் - திருக்கோயிலில் வந்து கூடுதல்; பெருகு - பலவாறும் வருதலால் பெருகும்; காஞ்சிபுரமும் திருவாரூரினைப் போலவே தொண்டர் கூட்டம் பெருகும் சிறப்புடையது என்ற குறிப்புமாம். திருஏகாம்பரம் - திருஏகம்பர் எழுந்தருளியுள்ள திருக்கோயில்; திரு ஏகம்பம் எனப்படும்; இது வேறு; திரு ஏகாம்பரம் என்ற பெயர் வழக்கு வேறு; ஏகாரம்பரம் - ஆம்பரம் - மாமரம்; ஏகம் - ஒப்பற்றது - ஒன்று; ஏகம் ஆம்பரம் - ஏகாம்பரம் என மருவி வழங்குவது. இத்திருக்கோயிலில் உள்ள அம்மை தவமிருந்த மாவடி என்னும் மாமரத்தினாற் போந்த பெயர்; ஏகம்பரம் - கம்பம் - இறைவர் எழுந்தருளிய இடம் - கோயில்; கம்பர் - கம்பன் - "கச்சி மாநகர்க் கம்ப மிருப்பதே" - "கம்பவாணர் என்பன முதலிய வழக்குக்கள் காண்க. |
|
|