பாடல் எண் :3341

ஆழி நெடுமா லயன்முதலா மமரர் நெருங்கு கோபுரமுன்
பூழி யுறமண மிசைமேனி பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிகைபலவுந் தொழுது வணங்கி வலங்கொண்டு
வாழி மணிப்பொற் கோயிலினுள் வந்தா ரணுக்க வன்றொண்டர்.
187

(இ-ள்.) ஆழி....புகுந்தருளி - சக்கரத்தினையுடைய நெடிய விட்டுணு பிரமன் முதலாகிய தேவர்கள் நெருங்கியிருக்கும் திருக்கோபுரத்தின் முன்பு புழுதி படிய நிலத்தின்மேல் தமது திருமேனி பொருந்தும்படி வணங்கி உள்ளே புகுந்தருளி; சூழும்...வலங்கொண்டு - சூழ்ந்துள்ள அழகிய திருமாளிகைகள் பலவற்றையும் தொழுது வணங்கிக்கொண்டு சுற்றி வலமாக வந்து; வாழி....வன்றொண்டர் - திருவணுக்கன் றொண்டராகிய வன்றொண்டர் வாழ்வுடைய மணிப்பொற் கோயிலாகிய திருவேகம்பர் திருமாளிகையினுள் வந்தருளினர்.
(வி-ரை.) ஆழி....அமரர் நெருங்கு கோபுரம் - அமரர்கள் கோபுரவாய்தலில் உட்புகும் காலம் பார்த்துத் திருநந்திதேவ ராணையினை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர் என்பது. "வாய்தல் பற்றித், துன்றிநின்றார் தொல்லை வானவரீட்டம் பணியறிவான், வந்துநின் றாரய னுந்திரு மாலும்" (கச்சி - திருவிருத்தம்).
பூழி பொருந்த - கோபுரத்தின் முன்பு திருமேனி நிலம் பொருந்துதலாற் பூழி படிய வணங்கும் நிலை குறித்தது.
சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி - கச்சித் திருக்கோயிலினுள் புறச்சுற்றிலே திருக்கச்சி மயானம் முதலாகிய பல திருமாளிகைகள் உள்ளனவாதலின் அவற்றைத் தனித்தனி வணங்கிக்கொண்டு திருக்கோயிலை அவ்வாறு வலமாக வந்தருளினர் என்பதாம்.
மணிப்பொற் கோயில் - திருவேகம்பர் திருமாளிகை.
வாழி - வாழ்வு தருவது என்ற பொருளில் நின்றது; அசையெனினுமாம்.
அணுக்க வன்றொண்டர் - முன்னைய நிலையிற் றிருக்கயிலையினும், இந்நிலையில் வழியடிமை செய்யும் வேதிர் குலத்துட் டோன்றிய நிலையினும் அணுக்கன் றொழில் செய்யும் உரிமையுடையவர் என்பதாம்.
வந்தார் - பயனிலை முன்வந்தது விரைவு குறித்தது.