வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி யெழுந்து மெய்யன்பால் வாழ்ந்த சிந்தை யுடன்பாடி மாறா விருப்பிற் புறம்போந்து சூழ்ந்த தொண்ட ருடன்மருவு நாளிற் றொல்லைக் கச்சிநகர்த் தாழ்ந்த சடையா ராலயங்கள் பலவுஞ் சார்ந்து வணங்குவார். | 189 | (இ-ள்.) வீழ்ந்து....புறம்போந்து - முன்கூறியவாறு நிலமுற வீழ்ந்து துதித்துப் பரவசப்பட்டு விம்மி மேலெழுந்து மெய்யன்பினாலே வாழ்வடைந்த மன நிறைவுடனே பாடியருளியபின் மாறுதல் இல்லாத விருப்பினுடனே புறத்திலே போந்தருள; சூழ்ந்த...நாளில் - தம்மைச் சூழ்ந்த திருத்தொண்டர்களுடனே கூடியிருக்கும் நாள்களிலே; தொல்லை... வணங்குவார் - பழைமையாகிய கச்சிமா நகரத்திலே தாழ்ந்த சடையினையுடைய இறைவனார் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் பலவற்றையும் சார்ந்து வணங்குவாராகி, (வி-ரை.) வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து - அம்மையார் "என்றும் வழிபடுஞ் சேவடி"கள் என்ற எண்ணம் கொண்டு அத்திருவடிக் கீழ் வீழ்ந்தபோது அந்த அருளிப் பாட்டினை எண்ணப் பரவசமாய்க் கிடந்து விம்மினார்; அதன்பின் எழுந்து பாடினார். மாறாவிருப்பிற் புறம்போந்து - புறம் போகுதல் விருப்பம் நிறைந்த பின்னர் நிகழ்தல் இயல்பாம். ஆயின் இங்கு நம்பிகள் விருப்பம் மாறாதவாறே - நிறைந்த விருப்பில் நின்றவாறே - புறம் போந்தனர் என்பது. சூழ்ந்த தொண்டர் - நம்பிகளுடன் வந்தாரும், அங்கு வந்து சூழ்ந்தாரும். தொல்லை - மிகப் பழமை; கச்சிமா நகரின் அழியாத தொன்மை. ஆலயங்கள் பலவும் - கச்சியில் உள்ள எண்ணிறந்த சிவாலயங்கள். |
|
|