பாடல் எண் :3345

ஓண காந்தன் றளிமேவு மொருவர் தம்மை யுரிமையுடன்
பேணி யமைந்த தோழமையாற் பெருகு மடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி "நெய்யும் பாலுங்" கலைவிளங்கும்
யாணர்ப் பதிக மெடுத்தேத்தி யெண்ணி னிதிபெற்றினிதிருந்தார்.
191

(இ-ள்.) வெளிப்படை. திருவோண காந்தன்றளியில் எழுந்தருளியஇறைவரை உரிமையினோடு விரும்பிக் கொண்ட தோழமைத்திறம் பற்றிப் பெருகிவளரும் அடிமைத் திறத்தினைச்சொல்லி, காணத்தினோடு பொன்னை விரும்பி, "நெய்யும் பாலும்" என்று தொடங்கும் கலைகளின் தன்மை விளங்குகின்றஅழகிய திருப்பதிகத்தினை எடுத்துப் போற்றி எண்ணில் நிதியங்களைப் பெற்று இனிதாக எழுந்தருளியிருந்தார்.
(வி-ரை.) ஓணகாந்தன்றளி மேவும் ஒருவர் - திருஓண காந்தன்றளி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான்.
உரிமையுடன்...அடிமைத்திறம் - உரிமையுடன் பேணி யமைந்த தோழமை - இறைவர் தாமே விரும்பி எடுத்துக்கொண்ட தோழராந் தன்மை; "தோழமையாக வுனக்கு நம்மைத் தந்தனம்" (273) என்று இறைவர் பேணிக்கொண்ட தோழராந் தன்மை; பேணி - இறைவர் விரும்பி; உரிமையுடன் - என்பதனை அடிமைத்திறம் என்றதுடனும் கூட்டுக.
பெருகும் அடிமைத்திறம் - பெருகுதல் - அடிமை செய்தற்கண் சோர்வுபடாது மேலும் மேலும் ஆர்வமிகுதல்.
தோழமையாற் பேசி - என்று கூட்டுக; அடிமைத்திறம் பேசுதலாவது அடிமைத் திறம்பற்றிப் பேசினும் அப்பேச்சுத் தோழராந் தன்மைபற்றிக் கொண்ட அமைப்பினையுமுடையதா யிருத்தல். பதிகப் பாட்டுக்கள் பார்க்க.
காணம் - காசு; பொன் - அணிகளுக்காகத்தக்க படிக்குள்ள பொன்; "காணமில்லை" (பதிகம்).
நெய்யும் பாலும் - கலை விளங்கும் யாணர்ப் பதிகம் - "நெய்யும் பாலும்" - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; கலை - கலைகளின் பொருளும் கலையமைதியும்; யாணர் - அழகு.
எண்ணில் நிதி - அளவில்லாத நிதியம்; இரட்டுற மொழிதலால் எண்+நில் என்று பிரித்து, தமது எண்ணத்தில் - கருத்தில் - நின்ற என்றலுமாம். நிதி பெறக்கருதிப் பாடியமை பற்றிப் பதிகக் குறிப்புப் பார்க்க.
திறம் பெருக - என்பதும் பாடம்.