பாடல் எண் :3347

பாட விசையும் பணியினாற் பாவை தழுவக் குழைகம்பர்
ஆடன் மருவுஞ் சேவடிகள் பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர் நிலவும் பதிக டொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான் பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
193

(இ-ள்.) பாட இசையும் பணியினால் - பாடுதற்கு இசைகின்ற பணி செய்யப் பெற்றதனால்; பாவை தழுவ....அமர்கின்றார் - அம்மையார் தழுவக்குழைந்து காட்டிய திருவேகம்பரது அருட்கூத்தாடுந் திருவடிகளைத் துதித்துப் பிரியாது விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற நம்பிகள்; நீட...விருப்பால் - மிகப் பழமையாகிய அந்தக் கச்சிமூதூரின் புறத்திலே நிலவுகின்ற பதிகளைத் தொழும் விருப்பத்தினாலே சென்று; மாடம்...வந்தடைந்தார் - மாடங்கள் நெருங்கி விளங்கும் வன்பார்த்தான் பனங்காட்டூரிலே வந்தடைந்தருளினர்.
(வி-ரை.) பாடவிசையும் பண்பினால் - பிரியா தமர்கின்றார் - என்று கூட்டுக. அங்குப் பிரியாதமர்கின்ற நிலை பாட்டுப்பாடப் பொருந்தும் தன்மை காரணமாம். பாடும் பண்பு பெறப்பட்டமையாலே அங்குநின்றும் பிரியாது தங்கியருளினார் என்க; ஏகம்பரைப் பாடுதலில் அத்துணை விருப்பமும் ஆர்வமும் கொண்டிருந்தனர் என்பதாம். "பாட இசையும்" - பாடப் பணித்து ஆட்கொண்ட திறம் காண்க (216). அமர்கின்றார் - அமர்கின்றாராகிய நம்பிகள்; வினைப்பெயர்; அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல்.
பாவை தழுவக் குழைகம்பர் ஆடல் மருவும் சேவடிகள் -கம்பர் - திருவேகம்பர்; ஏகம்பரின் கருணையின் எளிமை குறித்தது; ஆடல் - உலகை ஆளும் ஐந்தொழில் அருட்கூத்து; 1140 - 1141 பார்க்க.
பரவி - அரிய இப்பதிகங்கள் கிடைத்தில!
நீட மூதூர் - மிக நீண்டு செல்லும் பழமையுடைய கச்சிமாநகர். "தொல்லைக் கச்சிநகர்" (3343); தனது சூக்கும ரூபம் பிரளயங்களினும் அழியாதிருக்கும் நிலை; "பல வூழிக ணின்று நினைக்குமிடம் வினை தீருமிடம்" (10) என்ற பதிகம் பார்க்க; (நம்பி - அனேகதங் காவதம்)
புறத்திறைவர் நிலவும் பதிகள் - இவை காஞ்சி நகருக்கு அப்பாற்பட்ட பல பதிகள்; முன் "பிறவும் தானங்கள்" (3346) என்றவை அவ்வெல்லைக்குட்பட்டவை; "திருந்து காதநான் குட்பட வகுத்து" (1162) என்று இதன் எல்லை வகுத்தது காண்க.
பாடலிசையும் - புனற்புறத்தினிலவும் - என்பனவும் பாடங்கள்.