மன்னு திருமாற் பேறணைந்து வணங்கிப் பரவித் திருவல்லந் தன்னுளெய்தி யிறைஞ்சிப்போய்ச் சாரு மேல்பாற் சடைக்கற்றைப் பின்னன் முடியா ரிடம்பலவும் பேணி வணங்கிப் பெருந்தொண்டர் சென்னி முகிறோய் தடங்குவட்டுத் திருக்கா ளத்தி மலைசேர்ந்தார். | 195 | (இ-ள்.) மன்னு...போய் - நிலைபெற்ற திருமாற் பேறு என்னும் பதியினை அணைந்து வணங்கிச் சென்று, திருவல்லத்தினைச் சேர்ந்து வணங்கிப் போய்; சாரும் மேல்பால்...வணங்கி - சார்கின்ற மேற்குப் பக்கத்தில் சடைக்கற்றை பின்னி விளங்கும் முடியினையுடைய இறைவர் எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் விரும்பி வணங்கி; பெருந்தொண்டர்...சேர்ந்தார் - பெருந்தொண்டராகிய நம்பிகள் உச்சியில் மேகங்கள் தோய்கின்ற பெரிய முடிகளையுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தருளினர். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன (வி-ரை.) மன்னு....இறைஞ்சிப் போய் - திருக்கச்சியினின்றும் தென்மேற்காகச் சென்று திரு வன்பார்த்தான் பனங்காட்டூரினை வழிபட்டு, அங்கு நின்றும் மீண்டு திருக்கச்சி வழியே வடக்கில் சென்று திருமாற்பேறு வணங்கி, அங்கு நின்றும் மேற்பாற் சென்று திருவல்லத்தினை வணங்கினார் என்க. மேல்பால்...இடம் பலவும் - இவை திருக்கரபுரம் முதலியவை. பின்னல் - புரித்ததுபோலும் உருவுடைய. சென்னி முகில் தோய் தடங்குவட்டு - மேகங்கள் தவழ்தற்கிடமாகிய பெரிய சிகரங்கள் மலையின் உயர்ச்சி குறித்தது. திருக்காளத்தி மலை சேர்ந்தார் - திருவல்லத்தி னின்றும் மேல்பாற் போய்ப் பல பதிகளை வணங்கினார் என்றதனால் நெடுந்தூரம் சென்று அங்குநின்றும் வடகிழக்காகப் போய் நேரே திருக்காளத்திமலை சேர்ந்தருளினர். ஆளுடைய பிள்ளையாரும் அரசுகளும் திருக்காரிகரை இறைஞ்சித் திருக்காளத்திமலை சேர்ந்த வழி வேறு. |
|
|