பாடல் எண் :3351

வணங்கி யுள்ளங் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரவிசை
யணங்கு "செண்டா" டெனும்பதிகம் பாடி யன்பாற் கண்ணப்பர்
மணங்கொள் மலர்ச்சே வடிபணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதி
இணங்கு தொண்ட ருடன்கெழுமி யின்புற் றிருக்கு மந்நாளில்,
197

(இ-ள்.) வணங்கி...போற்றி - வணங்கி மனத்தின் கண்ணே களிப்பு மீக்கூர மகிழ்ச்சியுடன் பொருந்தத் துதித்து; மதுர இசை....பாடி - இனிய இசை மிகுந்த "செண்டாடும்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடி; அன்பால்...போந்து - அன்பினாலே திருக்கண்ணப்ப தேவருடைய மணமுடைய தாமரைமலர் போன்ற செம்மை பெற்ற திருவடிகளைப் பணிந்து வாழ்வடைந்து புறம்பு போந்து; மன்னுபதி...நாளில் - நிலைபெற்ற அத்திருப்பதியிலே இணங்குதொண்டர்களுடன் அன்பு பொருந்தக் கூடி இன்பமுற்று எழுந்தருளியிருக்கும் அந்நாள்களில்,
(வி-ரை.) அணங்கு - கூடிய; கலந்த; விரும்பும் என்றலுமாம்.
மதுரவிசை - பதிகப் பண்ணாகிய இசை; பண் நட்டராகம்.
அன்பால்...வாழ்ந்து - திருக்கண்ணப்ப தேவரை வணங்கி அதனால் தாம் பெருவாழ்வடைந்து; முன்னர் ஆளுடைய அரசுகளும் பிள்ளையாரும் இவ்வாறு வணங்கியமை காண்க. நம்பிகளும் முன்னர்த் திருத்தொண்டத் தொகையுள் வைத்துப் போற்றி யருளினர்; இங்கு நேரே வணங்கினர்.
இணங்குதொண்டர் - இணங்குதல் - அன்பு பெருகச் சார்தல்; பொருந்துதல்; "அன்பரொடு மரீஇ" (12-சூத். போதம்); இணங்கத்தக்க என்றதும் குறிப்பு.
கெழுமுதல் - அன்பால் இன்பம் பெருகக் கூடுதல். உடன் இன்புற்று என்பதும் காண்க.
அந்நாளில் இருந்திறைஞ்சிப் பாடிக் களிசிறந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
பாடி அன்பர் - உடன் விரும்பி - என்பனவும் பாடங்கள்.