பாடல் எண் :3352

வடமா திரத்துப் பருப்பதமுந் திருக்கே தார மலையுமுதல்
இடமா வரனார் தாமுவந்த வெல்லா மிங்கே யிருந்திறைஞ்சி
நடமா டியசே வடியாரை நண்ணி னார்போ லுண்ணிறைந்து
திடமாங் கருத்திற் றிருப்பதிகம் பாடிக்காதல் சிறந்திருந்தார்.
198

(இ-ள்.) வடமாதிரத்து....இறைஞ்சி - வடதிசையிலே உள்ள சீபர்ப்பதமும் திருக்கேதாரமலையும் முதலாகச் சிவபெருமான் விரும்பி எழுந்தருளும் இடமாகக் கொண்ட எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே வணங்கி; நடமாடிய...பாடி - ஆனந்தக் கூத்தாடும் சேவடியினையுடைய இறைவரை நேரே கண்டு பொருந்தியவர்போல உள்ள நிறைந்து உறுதிப்பாடுற்ற கருத்துடனே திருப்பதிகம் பாடியருளி; காதல் சிறந்திருந்தார் - மிக மகிழ்ந்தருளினார்
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

(வி-ரை.) வடமாதிரம் - வடதிசை; வடநாடு குறித்தது.
பருப்பதம் - சீபர்ப்பத மலை; ஸ்ரீ சைலம் எனவும்படும்; திருக்கேதார மலை - இமயமலைச் சாரலில் உள்ளது.
முதல் - முதலாக; முதலியனவாக; திருக்கயிலாயம், திருஅனேகதங்காவதம், திருஇந்திரநீலப்பருப்பதம் முதலியவை.
இங்கே இருந்திறைஞ்சி - இங்குத் திருக்காளத்தியிலிருந்தவாறே வணங்கி; ஆளுடைய பிள்ளையாரும் இவ்வாறே வடநாட்டுத் தலங்களையும், திருக்கோகரணத்தையும் இங்கிருந்தே வணங்கிப் பாடி யருளியமை காண்க. 2924- 2925 பார்க்க. ஆளுடைய அரசுகளும் இங்கு வணங்கிய குறிப்பினாலே திருக்கயிலையினை நேரே கண்டு வணங்கக் காதலித்து வடநாட்டிற் சென்றருளியதும் நினைவுகூர்க. (1612)
நண்ணினார்போல்....கருத்தில் - இத்துணை நெடுந்தூரத்தின் இடை பிரிந்திருப்பினும் மனக்கண்முன் தியானத்தில் நேரே கண்டவாறு உறுதிப்பட்ட எண்ணத்திற் கொண்டு; "பொருந்திய தேச கால இயல்பகல் பொருள் களெல்லாம், இருந்துணர் கின்ற ஞானம் யோகநற் காண்ட லாமே" (சித்தி. அளவை - 13) என்றபடி ஞானயோகக் காட்சியில், மானதமாக வன்றி, நேரே புலப்படக் கண்டு என்க.
காதல் சிறத்தல் - மிக மகிழ்தல்.
மலைமுதலாம் - தாமகிழ்ந்த - என்பனவும் பாடங்கள்.