பாடல் எண் :3353

அங்குச் சிலநாள் வைகியபின் னருளாற் போந்து பொருவிடையார்
தங்கு மிடங்க ளெனைப்பலவுஞ் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு புவியுட் சிவலோகம் போலத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு வொற்றி யூரைச் சென்றடைந்தார்.
199

(இ-ள்.) அங்கு.....பின் - அப்பதியில் (திருக்காளத்தியில்) சில நாள்கள் தங்கியருளியபின்; அருளாற் போந்து - அருள்விடையினைப் பெற்றுப் போய்; பொருவிடையார்....தமிழ்பாடி - போர் விடைப்பாகராகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏனைப் பதிகள் பலவற்றையுஞ் சென்று சார்ந்து வணங்கித் தமிழ்ப்பதிகங்களைப் பாடித் துதித்தருளி; பொங்கு...சென்றடைந்தார் - அலைகள் பொங்கி வருகின்ற கடலின் கரையின் பக்கத்திலே இந்நிலவுலகத்தினிலே சிவலோகத்திற் போலவே, சந்திரனை முடியிலே தரித்த இறைவர் விரும்பி எழுந்தருளிய திருவொற்றியூரைச் சென்று சேர்ந்தருளினர் (நம்பிகள்).
(வி-ரை.) அருளாற் போந்து - திருவருள் விடைபெற்றுச் சென்று; "தென்புவி மீது தோன்றி" (37) என்று திருக்கயிலையில் இறைவர் அருளிய ஆணையின் வழியே இப்புவியில் வந்த நம்பிகள் அவ்வாணைக்குக் காரணமாகிய இருவருள், முன், திருவாரூரிற் கண்ட அம்மையாரின் நிகழ்ச்சிகள் போக, எஞ்சிய ஒருவரைப் பற்றிய நிகழ்ச்சிகள் இனி இங்குத் திருவொற்றியூரிற் காணவேண்டிய தொடர்பு உள்ளமையால், அவற்றின் பொருட்டுத் திருவருள் கூட்டுவிக்க அதன் வழியே போந்து என்ற குறிப்புங் கண்டுகொள்க.
இடங்கள் எனைப்பலவும் - இவை திருக்காரிகரை, திருக்கள்ளில், புண்ணிய கோடீசுவரர் கோயில் முதலியன என்பது கருதப்படும்.
தமிழ் பாடி - நம்பிகளது இப்பதிகங்கள் கிடைத்தில!
புவியுட் சிவலோகம்போல....அமர்ந்த - திருவாரூரிற் புற்றிடங் கொண்கெடழுந்தருளுதல் போல, ஈண்டும் படம்பக்கம் இருக்கை கொண்டு புற்றிடங் கொண்டருளுதலும், தியாகேசரது சிறப்பும், தேவாரத் திருப்பதிகங்களிற் காட்டியருளப்பட்ட சிவத்துவ விளக்கமாகிய எண்ணிறந்த பெருமைகளும் உட்கொண்டு கூடியபடி. இனித், திருக்கயிலையில் நின்றும் போந்த நம்பிகளின் சரிதப்பகுதிகளுள் தொடர்பாகி முன் திருவாரூர்க் கோயில் வாயிலில் கமலினியார் காட்சி தொடர்ந்த பகுதிகள் போக, எஞ்சிய அநிந்திதையாரின் காட்சி முதலியன இங்குத் திருக்கோயிலினுள் இறைவர் முன்பு நிகழ்வனவாதலின் அங்குத் திருக்கயிலையில் இறைவர் மகிழ்ந்தமைபோல இங்கும் விரும்பி எழுந்தருளினர் என்ற சரிதக் குறிப்பும் காண்க. "தொடர்ந்து" என்ற மேற்பாட்டின் குறிப்பும் காண்க.