பாடல் எண் :3354

அண்ண றொடர்ந்தா வணங்காட்டி யாண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை யாதிபுரி யிறைவ ரடியா ரெதிர் கொள்வார்
வண்ண வீதி வாயிறொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூபதீப மெடுத்துத் தொழவெழுங்கால்,
200

(இ-ள்.) அண்ணல்...எழுந்தருள - இறைவர் தாமே வந்து தொடர்ந்து ஓலை காட்டித் தடுத்து ஆட்கொண்டருளிய நம்பிகள் எழுந்தருள அது கேட்டு; எண்ணில்...எதிர் கொள்வார் - அளவற்ற பெருமையுடைய ஆதிபுரி என்னும் திருவொற்றியூரில் இறைவரது அடியவர்கள் அவரை எதிர்கொள்வார்களாய்; வண்ணவீதி...தொழ எழுங்கால் - அழகிய வீதிகளில் வாயில்கள்தோறும் வாழையும் கமுகும் தோரணங்களுமாக நாட்டியும் தூக்கியும். சுண்ணமும் பொன்னாலியன்ற நிறைகுடங்களும் தூபதீபங்களும், ஏந்தியும், எதிர்சென்று தொழுவதற்கு எழுந்தபோது,
(வி-ரை.) தொடர்ந்து - திருக்கயிலையில் தந்த வரமொழியினைத் தொடர்ந்து என்க; ஆளாந் தன்மையில் தொடர்பினைப்பற்றி என்ற குறிப்புமாம்; "ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த, சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்" .
ஆவணங் காட்டி ஆண்ட நம்பி - இவ்வருளிப்பாடே உலகறியப் போற்றப்பட்டதாதலின் அதுவே அடியார் உள்ளத்தில் முற்பட எழுந்தது; ஆளுடைய அரசுகளை வெஞ்சூலை மடுந்தருளி நேரே ஆட்கொண்ட அருட் செயலும், பிள்ளையாரை ஞானஅமுது அருளி ஆட்கொண்டமையும் போல, முதற்கண் உலகறிந்துபோற்ற நிற்கும் தன்மை; அண்ணலினால் ஆட்கொள்ளப்பட்ட; ஆண்ட - ஆட்கொள்ளப்பட்ட; செயப்பாட்டு வினையாகப் பொருள் கொள்க.
எண்ணில் பெருமை - எண் - நில் - எண்ணத்தில் நிற்க வரும் என்றலுமாம்.
ஆதிபுரி - திருவொற்றியூரின் திருப்பெயர்கள் பலவற்றுள்ளும் சிறந்தபெயர்.
அடியார் எதிர்கொள்வார் - எழுங்கால் - பெருந்தொண்டர் - புகுந்தார் - என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க; எழுங்கால் என்ற எச்சம் பிறவினை முதல்வினையின் வினைகொண்டு முடிந்தது.
வீதி வாயில் தொறும் - வீதியின் மனைகளின் வாயில்கள்; வீதிகளின் முகப்புக்கள் என்றலுமாம்.
வாழை கமுகு நாற்றித் தோரணங்கள் நிரைத்து, என்று வினையெச்சங்களை இடத்துக்கேற்ப விரிக்க.
சுண்ணமும் குடமும் தூபமும் தீபமும் என உம்மைகள் விரித்துரைத்துக் கொள்க. உம்மைத்தொகை.
எடுத்தல் - ஏந்துதல்; தொழ - நம்பிகளை எதிர்சென்று தொழுவதற்கு.