வரமங் கலநல் லியமுழங்க வாசமாலை யணியாங்கிற் புரமங் கையர்க ணடமாடப் பொழியும் வெள்ளப் பூமாரி அரமங் கையரு மமார்களும் வீசவன்ப ருடன்புகுந்தார் பிரமன் றலையிற் பலியுகந்த பிரானார் விரும்பு பெருந்தொண்டர். | 201 | (இ-ள்.) வர மங்கலம்...முழங்க - மேலான நல்ல மங்கல வாத்தியங்கள் முழங்கவும்; வாசமாலை...நடமாட - மணம் பொருந்திய மலர்மாலைகளால் அணி செய்யப்பட்ட ஆடரங்குகளில் அந்நகரத்தில் உள்ள ஆடற் பெண்கள் நடமாடவும்; பொழியும்...வீச - மேலிருந்து பொழிகின்ற வெள்ளமாகிய பூமழையினை வான் அரமகளிர்களும் தேவர்களும் வீசவும்; அன்பருடன்....பெருந் தொண்டர் - பிரமகபாலத்தில் விரும்பிப் பலிகொள்ளும் சிவபெருமான் விரும்பும் பெருந் தொண்டராகிய நம்பிகள் தம்முடன் வந்த அன்பர்களுடனே கூடி நகரத்தினுள்ளே புகுந்தனர். (வி-ரை.) வரமங்கலம் - மேலான மங்கலம். வாசமாலை அணி அரங்கு - வாசமாலை - இந்நாளிற் காணப்படும் காகிதம் முதலிய போலிப் பொருள்களாலான மாலையன்றி, உண்மையான மணமுள்ள பூமாலைகள். புரம் - நகர்; மேல் அரமங்கையர் செயல் கூறுதலின் அதனின்வேறு பிரித்துணர்தற்குப் புரமங்கையர் என்றடைமொழி தந்தோதினார்; பிறிதினியைபு நீக்கிய விசேடணம். அரமங்கையர் - இவர்கள் வானில் உள்ளவர்கள்; தேவச் சாதிப் பெண்கள். "வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட" (முருகு). அன்பருடன் - இவர்கள் நம்பிகளுடன் வந்த அடியார்கள். புகுந்தார் - பதியினுள்ளே புகுந்தார்; அடியவர்கள் தொழ எழுவதற்கும் நம்பிகள் புகுதற்கும் நேரம் ஒத்திருந்த தென்பதாம்; புகுந்தார் - பெருந் தொண்டர் என வினைமுற்று முன்வந்தமை ஆர்வத்தினால் வரும் விரைவு குறித்தது. முன்பாட்டினால் அடியார் செயலும், இப்பாட்டினால் அவர்களின் வேறாகிய நகரமாந்தர் முதலியோரின் செயல்களும் குறிக்கப்பட்டன. மங்கல இயங்கள் முழங்குதலும் - அரங்கில் - மங்கையர்கள் நடமாடுதலும் - நித்தியமாய் நிகழும் நகரமங்கலங்களும், நம்பிகள் வருகையின் பொருட்டு நிகழும் சிறப்பு மங்கலங்களுமாம், "தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடும்", "வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர" (தேவா). |
|
|