பாடல் எண் :3356

ஒற்றி யூரி னுமையோடுங் கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்று மணைந்து துதிசெய்யத் தொழுது தம்பி ரானன்பர்
கொற்ற மழவே றுடையவர்தங் கோயில் வாயி லெய்தினார்.
202

(இ-ள்.) ஒற்றியூரில்...தொண்டர் - திருவொற்றியூரிலே உமையம்மையாருடனே கூடி நிலைபெற்று வீற்றிருந்தருளும் சிவபெருமானாரது உயர்ந்த தவத்தில் மிகவும் பற்றுடைய திருத்தொண்டர்கள்; பரந்த...துதிசெய்ய - பரவிய கடல்போல வந்து நெருங்கிக் கூடிச் சுற்றிலும் அணைந்து துதிக்க; தம்பிரான் அன்பர் - சிவபெருமா னன்பராகிய நம்பிகள்; தொழுது - திருத்தொண்டர் கூட்டத்தினைத் தொழுது; கொற்ற...எய்தினார் - வெற்றி பொருந்திய இளைமையுடைய இடபவேற்றினை உடைய இறைவரது திருக்கோயில் வாயிலினை வந்தடைந்தனர். (வி-ரை.) நின்றார் - நிலைபெறக் கலந்து வெளிப்பட வீற்றிருந்த இறைவர்; படம்பக்க நாதர்.
நின்றார் உயர்தவம் - நின்றாருடைய உயர்ந்த தவம்; தவமாவது சிவபூசை; சரியையாதி நால்வகைப்பட்ட நெறிகள்; நின்றார் - நின்றார் வகுத்த; நின்றாரைப் பற்றிய என்றலுமாம். உயர் - இதுவே எனை எல்லாச் சமயங்கள் வகுக்கும் எல்லாவற்றினும் உயர்வுடையது என்பது; பற்று - அன்பும் அது காரணமாக வரும் ஒழுக்கமும்.
அணைந்து துதிசெய்ய - "தொழ எழுங்கால்" (3354) என்றபடி எழுந்து போந்து அணைந்து தொழுது துதிக்க என்க.
தொழுது - தொண்டர் கூட்டத்தினை நம்பிகள் தொழுது; அவர்கள் தொழுததனைக் கூறாது (நம்பிகள்) தொழுது என்றது, அவர்கள் தொழுததனைப் பற்றாமலே நம்பிகள் தொழுதனர் என்ற குறிப்புத் தருதற்கு. இவ்வாறே முன்னர்த் திருவாரூரிலும் "வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்ட ரஞ்சலி கூப்பி வந்து" (269) என்ற குறிப்பும் காண்க; திருத்தில்லையில் "முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமை யாலெதிர் வணங்கி" (244) என்றதும் கருதுக.
பரந்த கடல்போல் - உரு வுவமம்; பரப்புப் பொதுத் தன்மை. கடல்போல் ஒலி எழத் துதிசெய்ய என்று கூட்டி உரைத்தலுமாம்; இப்பொருட்கு வினைபற்றி யெழுந்த உவமையாகக் கொள்க.
ஏறு உடையவர் - ஏற்றினைக் கொடியாகவும் ஊர்தியாகவும் உடைய சிவபெருமான்; கொடி உயர்த்துதல் வெற்றிக்குறி யாதலின் கொற்ற - ஏறு என்றார்.