பாடல் எண் :3358

ஏட்டு வரியி "லொற்றிநகர் நீங்க" லென்னு மெழுத்தறியும்
நாட்ட மலருந் திருநுதலார் நறும்பொற் கமலச் சேவடியிற்
கூட்டு முணர்வு கொண்டெழுந்து கோதி லமுத விசைகூடப்
"பாட்டும் பாடிப் பரவி"யெனும் பதிக மெடுத்துப் பாடினார்.
204

(இ-ள்.) ஏட்டு வரியில்.....திருநுதலார் - ஏட்டின் வரியினிடையே "ஒற்றி நகர் நீங்கலாக" என்னும் எழுத்தினைப் புகுத்தி எழுதும் எழுத்தறியும் பெருமானாகிய, கண்பூத்த திருநுதலினை உடைய பெருமானது; நறும்பொன்...எழுந்து - நறிய அழகிய கமலச் சேவடியிற் கூட்டுகின்ற உணர்ச்சியினை மேற்கொண்டு எழுந்து; கோதில்....பாடினார் - குற்றமில்லாத அமுத இசை பொருந்தப் "பாட்டும் பாடிப் பரவி" என்று தொடங்கும் முதலையுடைய திருப்பதிகத்தினைத் தொடங்கிப் பாடியருளினார்.
(வி-ரை.) ஏட்டுவரியில்....எழுத்தறியும் - இஃது இத்தலத்தின் விளக்கமாய் வழங்கும் பழஞ்சரிதம்; முன், "வரியை, நெருக்கி முன்றிரு வொற்றியூர் நீங்க என்றெழுது, மொருத்தர்"(1116) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
எழுத்தறியும்...திருநுதலார் - கண்ணின் பார்வை செய்து தெரிந்த பின்பே எழுத வேண்டுதலின் "நாட்ட மலரும்" என்ற குறிப்பாற் கூறினார்.
சேவடியிற் கூட்டும் உணர்வு - இறைவரது திருவடிச் சார்புபற்றியே கூறுதல் குறிக்கத்தக்கது.
உணர்வு கொண்டெழுந்து என்றது அன்பு மீதூர்தலின் பரவசப்பட்டு வீழ்ந்தவர் பின்பு ஓர் உணர்ச்சி கொண்டனர்; அவ்வுணர்ச்சியாவது இறைவர் சேவடியிற் கூடும் உணர்வு; அது பற்றுக்கோடாகக் கொண்டு எழுந்தனர் என்றவாறாம்.
கோதில் அமுத இசை கூடுதல் - பதிகப் பண்ணாகிய குறிஞ்சிப்பண் வந்து நேர்ந்து பொருந்துதல்; "கூடல் குறிஞ்சி" என்றபடி இனிக் கூடல் நிகழும் திணை ஒழுக்கக் குறிப்புமாம்; அமுத இசை என்றது இக்குறிப்பு.
பாட்டும் பாடிப் பரவி எனும் - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
எடுத்து - தொடங்கி.
என்ன எழுத்தறியும் - கூட்டுமுணர்வும் - என்பனவும் பாடங்கள்.