பாடல் எண் :3359

பாடி யறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காத னிறைந்த வன்பர் பலர்போற்றத்
தேடு மயனுந் திருமாலு மறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களிலணைந்து பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
205

(இ-ள்.) பாடி...புறம் போந்து - திருப்பதிகம் பாடித் தம் அறிவு ஆனந்த பரவசமாதற் கேதுவாகிய பேரன்பானது தம் உள்ளத்தினைப் பற்றிக் கொள்ளப்புறத்திற் போந்து; நீடு....போற்ற - நீடிய விருப்பினாலே பேரன்பு நிறைந்த அன்பர் பலர்களும் துதிக்க; தேடுமயனும்...கும்பிட்டு - தேடுகின்ற பிரமதேவரும் திருமாலும் அறிதற்கரியனவாகிய இறைவரது திருவடிகளை வழிபாட்டு நிலை கூடிநின்ற எல்லாக் காலங்களிலும் அணைந்து கும்பிட்டு; இனிது இருந்தார் - நம்பிகள் அத்திருப்பதியிலே இனிதாக எழுந்தருளியிருந்தார்.
(வி-ரை.) அறிவு....பற்றுதலாவது - தமது அறிவு வசமிழந்து சிவானந்தத்தின் வசமாகத்தக்க அன்பு மீதூர்தல்; அந்நிலையினின்றும் மீண்டு புறம் போந்தனர் என்க.
கூடும் காலங்கள் - வழிபாட்டுக் குரிய பூசைக்காலங்கள்.
காலங்களிலணைந்து கும்பிட்டு - பூசைக்காலங்களில் எல்லாம் திருக்கோயிலில் அணைந்து வழிபட்டு.
இனிது இருந்தார் - மன ஒருமைப்பாட்டினில் மகிழ்ந்து அமர்ந்தருளினர்.
பரவசமாய் - என்பதும் பாடம்.