பாடல் எண் :3360

இந்த நிலைமை யாரிவரிங் கிருந்தார்; முன்பே யிவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி யருளாற் போந்த வநிந்திதையார்
வந்து புவிமே லவதரித்து வளர்ந்து பின்பு வன்றொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சோந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.
206

(இ-ள்.) இந்த.....இருந்தார் - மேற்கூறியவாறு இந்த நிலைமையாராகி நம்பிகள் இங்குத் திருவொற்றியூரில் இருந்தருளினர்; முன்பே....அநிந்திதையார் - (நம்பிகள் இவ்வாறு சேர்வதற்கு) முன்பாகவே இவர் பொருட்டுஅழகியகுளிர்ந்த கயிலை மலையினை நீங்கி இறைவரது திருவருள் ஆணையின்படி தென்றிசைப் பிறவியிற் போந்த அநிந்திதையார்; வந்து....சாற்றுவாம் - வந்து நிலவுலகத்தின் மேல்அவதரித்து, வளர்ந்து, பின்னர் (இந்நாள்) வன்றொண்டரது மணஞ் சூழ்ந்த புயத்தினைச் சேர்ந்த வரலாற்றினை யாவருக்கும் அறியும்படி சொல்லப் புகுகின்றோம்.
(வி-ரை.) இது கவிக்கூற்று; இதுவரை நம்பிகளது சரித நிகழ்ச்சியில் உடன்போந்த நம் மனத்தைஎச்சிரித்தது, இனி, முன்னைத் தொடர்புடைய மற்றொரு வரலாற்றில் புகுதற்குச் சித்தம் செய்தவாறு. இவ்வாறு முன்னர்ப் பரவையார் வரலாற்றுத் தொடக்கத்திலும் வேறு பிரித்துத் தொடங்கிய நிலை (277)யும் கண்டு கொள்க; முன் சரித நிகழ்ச்சிகளைச் சுருங்கக்கூறித் தொடர்ந்து கொண்ட தன்மையும், இனிக்கூறும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்து கொண்ட தன்மையும் ஆகக் கவி யமைதியும் கண்டு களிக்கற்பாலது.
இந்த நிலைமை....இருந்தார் - இதுவரை தொடர்ந்து கூறிவந்த சரிதப் பகுதியை முடித்து நிறுத்திக் கொண்ட நிலை; இதன் தொடர்ச்சி மேலே (3378-ல்) வைத்துக் கண்டு கொள்க.
அந்தண்....அநிந்திதையார் - திருமலைச் சிறப்புப் பார்க்க.
அருளால் - இறைவரது அருளாணையினால்; திருக்கயிலையினின்றும் பிரிந்து கன்ம பூமியாகிய நிலவுலகிற் பிறவியிற் செலுத்துதலும் அருளேயாம் என்பது.
அநிந்திதையார் - கயிலையில் முன்னை நிலையில் அம்மையாரின் பெயர். (நிந்தையில்லாதவர் என்பது பெயர்ப் பொருள்).
வந்து புவிமேல் அவதரித்து வளர்ந்து - நிலவுலகில் வந்தது முதல் நம்பிகள் அணையும் வரை உள்ள அம்மையாரின் சரிதப் பகுதி.
பின்பு....பரிசு - திருமண வரலாற்றுப் பகுதி.
தெரிய - யாவரும் அறியும்படி.