பாடல் எண் :3361

நாலாங் குலத்திற் பெருகுநல முடையார் வாழு ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளா ராகிப் பார்மே லவதரித்தார்
ஆலாலஞ்சேர் கறைமிடற்றா ரருளான்முன்னை யநிந்திதையார்.
207

(இ-ள்.) நாலாங்குலத்தில் - வேளாளர் மரபிலே; பெருகு....ஞாயிற்றின் - பெருகி வளர்கின்ற நன்மைகளையுடைய மக்கள் வாழ்கின்ற ஞாயிறு என்னும் பதியிலே; மேலாம்....மிக்க - மேன்மை பொருந்திய ஒழுக்கமுடைய வேளாண்மையிற் சிறந்த; ஆதரவு தரும் மகளாராகி - அன்பு தரும் மகளாராக; முன்னை அநிந்திதையார் - முன்னை நிலையில் அநிந்திதையார் என்ற பெயருடன் விளங்கிய அம்மையார்; ஆலாலம்....அருளால் - ஆலாலவிடம் பொருந்தியதனாலே நீலகண்டராகிய சிவபெருமானது திருவருளாணையினாலே; பார்மேல் அவதரித்தார் - இவ்வுலகின்மேல் அவதாரஞ் செய்தனர்.
(வி-ரை.) நாலாங்குலம் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்று முன்னைப் பழந்தமிழ் நூல்களில் வகுக்கப்பட்ட நான்கு குலங்களுள்ளே நான்காவதாக வகுக்கப்பட்ட வேளாளர் குலம்; இதற்கு இவ்வாறன்றிப் பிராமணன் முதலிய நாற்குலத்து - வகுப்பினுள் நாலாவது என்று கொண்டும், சூத்திரன் என்று வருவித்துக்கொண்டும், அப்பெயர்க்கு உரிமையில்லாது இந்நாளிற் கொள்ளப்படும் பல இழிவுப்பொருள்கள்கொண்டும் இடர்ப்பட்டு இந்நாட் பெரும்பூசலுக்கு இடம் செய்து இடர்ப்படுத்துவோர் பலர். "வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது, இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி" (தொல். பொருள். மரபியல் 80). இதுபற்றி 440ன் கீழ் உரைத்தவையும் பார்க்க.
பெருகுநலம் உடையார் - சிறந்த ஒழுக்க முடைய குடிமக்கள் என்பது. இங்குக் கூறியவர்கள் அந்தணர் வேளாளர் முதலிய குடிகள் பலரும்.
ஞாயிற்றின் - ஞாயிறு என்ற பதியிலே.
மேலாங் கொள்கை வேளாண்மை - மெய்ம்மையினிற் சிறந்த வேளாளரின் தன்மை. "மெய்ம்மைநிலை வழுவாத மேன்மைநெறி விழுக்குடிமைச், செம்மையினாற்" (1606) "நம்பு வாய்மையி னீடு" (440) என்பன முதலியவை காண்க.
ஞாயிற்றின் மேலாம் கொள்கை - ஞாயிறு - சூரியன் என்று கொண்டு, சூரியனை விட மேலாக விளங்கும் புகழுடைய என்ற குறிப்புமாம். "பலர்புகழ் ஞாயிறு" (முருகு).
திருஞாயிறு கிழவர் - கிழவர் - வேளாளர்களுக்குரிய சிறப்பாகிய மரபுப் பெயர்; இது கிழார் என வழங்கும். கிழமையை உடையோர் என்பது பொருள். நிலத்திற்குரிய உரிமை குறித்தது; "செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந், தில்லாளினூடி விடும்" (குறள்). இப்பெயர் பெரும்பாலும் ஊர்பற்றியே வழங்கப்படும்; செங்குன்றூர்கிழார் - கோவூர்கிழார் - குண்டையூர்கிழார் முதலியவை காண்க; அவ்வூரில் முதன்மைபெற்று எல்லாராலும் விளக்கமாயறியப்படுதல் கருத்து. ஞாயிறு என்னுமூரின் முதன்மையடையோர் என்பதாம்.
ஆதரவு தரு மகளாராகி - ஆதரவு - அன்பு - மேம்பாடு என்றலுமாம். தரும் - அவரால் ஆதரவு பெறும் மகளார் என்பதன்றி, அவருக்கு ஆதரவு - பெருமை - சிறப்பு - தரும் மகளாராயினார் என்பதாம்.
பார் மேல் - கன்மபூமியாகிய நிலவுலகத்தில்; புவனியில்.
அருளால் முன்னை அநிந்திதையார் - முன்னர்த் திருமலைச்சருக்கத்திற் போந்த முன்னை வரலாற்றின் றொடர்பு முற்றும் அறிவித்த கவிநயம் கண்டுகொள்க (33-37); இப்பாட்டால் ஊரும், மரபும், பெற்றோரும், முன்சரிதமும் கூறியவாறு.