மலையான் மடந்தை மலர்ப்பாத மறவா வன்பின் வந்தநெறி தலையா முணர்வு வந்தணையத் தாமே யறிந்த சங்கிலியார் அலையார் வேற்கட் சிறுமகளி ராயத் தோடும் விளையாட்டு நிலையா யினவப் பருவங்க டோறு நிகழ நிரம்புவார், | 208 | (இ-ள்.) மலையான்....நெறி - மலையரசன் மகளாராகிய உமையம்மையாரது மலர் போன்ற பாதங்களை மறவாத அன்பு பூண்டுவந்த ஒழுக்கத்தின்; தலையாம்...அணைய - முன்னை யுணர்வு வந்து பொருந்த; தாமே அறிந்த சங்கிலியார் - அதனைத்தாமே இயல்பில் அறிந்தவாறே வந்தவதரித்துச் சங்கிலியார் என்னும் திருநாமம் பூண்ட அம்மையார்; அலையார்...நிகழ - அலைத்தற்றொழில் பொருந்திய வேல் போன்ற கண்களையுடைய சிறு மகளிர் கூட்டத்தோடும் விளையாட்டுக்களின் நிலைமைகள் அவ்வப் பருவங்கள் முறையே வந்து நிகழ; நிரம்புவார் - வயது நிரம்புவாராக, (வி-ரை.) மலையான்...வந்தநெறி - முன்னை நிலையில் திருக்கயிலையில் உமைஅம்மையாருக்குத் திருப்பணி செய்த நிலையினை மறவாத முன்னுணர்வுடன் அம்மையார் இவ்வுலகில் அவதரித்தார் என்பது. இவ்வாறு முன்னை நிலை உணர்வுடன் உதித்தல் சிவனருளாலாவது. கோச்செங்கட் சோழ நாயனார், "ஆதிமூர்த்தி யருளான்முன் னறிந்து பிறந்து" (மேற்படி புரா. 12), "முன்னைப் பிறப் புணர்ந்து, பெற்ற முயர்த்தார்க் காலயங்கள் பெருக அமைத்து மண்ணாண்ட" (நேச. புரா. 5) வரலாறு காண்க. இவ்வாறு வருதல் மிக அரியதாய்ச் சிவனை நோக்கி முயன்ற முன்னைப் பெருந்தவத்தால் அன்றி ஆவதன்று. தலையாம் உணர்வு வந்தணைய - தலை ஆம் - மேன்மை பெறுகின்ற; சிறப்பு ஆகும். வந்தணைய - அருளால் வந்து பொருந்த. தாமே யறிந்த - வேறொருவாற்றானும் பிறராலும் அறிவிக்கப்படாமல் தம் இயல்பினாலேயே உள்ளூற அறிந்த. பரவையார் திறத்தில் "தங்கள் பனிமலை வல்லிபாதங் கூடுமன் புருகப் பாடுங் கொள்கை" (281) என்றது காண்க. சங்கிலியார் - முன்கூறியவாறு அவதரித்த அநிந்திதையாருக்குச் சங்கிலியார் என்று பெயரிட்டனர்; அந்தச் சங்கிலியார் என்க. இவ்வளவும் குறிப்பெச்சத்தான் வருவித்துரைத்துக் கொள்க. அலையார் வேற்கண் - அலை - முதனிலைத் தொழிற்பெயர். அலைத்தலாகிய தொழில் பொருந்திய. வேற்கண் - வேல் போன்ற கண்; மெய்யும் வினையும் பற்றிவந்த உவமத் தொகை. விளையாட்டு நிலையாயின அப்பருவங்கள் - இவை; அம்மானை, நீராடல், பொன்னூசல் முதலாகப் பிள்ளைத்தமிழ் நூல்களிற் பேசப்படுவன. தோணோக்கம், பூவல்லி முதலியனவாய்த் திருவாசகத்தில் வருமவற்றுள் இப்பருவநிலைக் கேற்ற பெற்றியும் கொள்க. நிகழ - விளையாட்டுநிலை யாயினவை ஏற்ற அவ்வப்பருவங்களில் வந்து நிகழ; நிலையாயின - அகரவீற்றுப் பலவின்பாற் பெயர்; அப்பருவங்கள் - உரிய அவ்வப்பருவங்கள்; நிரம்புவார் - வயது கூடி வளர்வாராகி; நிரம்புவார் - சாரும் பதத்தில் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. விளையாடும் - என்பதும் பாடம். |
|
|