பாடல் எண் :3363

சீர்கொண் மரபில் வருஞ்செயலே யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரி லெவரு மதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரு மணிய வணியவாம் வளர்மென் முலைக ளிடைவருத்தச்
சாரும் பதத்திற் றந்தையார் தங்கண் மனைவி யார்க்குரைப்பார்.
209

(இ-ள்.) சீர்கொள்...அன்றி - (அவ்வாறு பருவ நிரம்புநாளில்) சிறப்புக்கொண்ட குல வொழுக்க நெறியில் வரும் செயல்களே யல்லாமல்; தெய்வ நிகழ் தன்மை - தெய்வத்தன்மை விளங்கும் பண்புகளும் (விளங்க); பாரில்....பைந்தொடியார் - உலகில் எல்லாரும் அதிசயப்படும் பண்பிலே வளர்ந்து வருகின்ற பைந்தொடியாராகிய சங்கிலியம்மையார்; வாரும்....பதத்தில் - கச்சுமணியும்படி சமீபித்த பருவமுடைய வளர்கின்ற தனங்கள் இடையினை அலைக்கும் படி சார்கின்ற பருவத்தில்; தந்தையார்....உரைப்பார் - அவரது தந்தையார் தமது மனைவியாருக்கு எடுத்துச் சொல்லுவாராய்,
(வி-ரை.) மரபில் வரும் செயல் - மரபு - குலம்; இவர் அவதரித்த வேளாண் மரபுக்கேற்றவாறு; வருகின்ற பருவங்கள் எல்லாக் குலத்திலும் ஒப்ப நிகழ்வனவாயினும் அவற்றுக்கு உரியனவாய் வெளிப்பாடு பெறவரும் செயல்கள் மரபு ஒழுக்கத்துக் கேற்றவாறு நிகழ்வன என்பது; மரபு - முறை என்றலுமாம்.
தெய்வ நிகழ் தன்மை - தெய்வத்தன்மை வெளிப்படுதல். உலகியலில் நீங்கி இறைவன் பற்றாகிய செயல்கள் விளங்குதல்.
அதிசயிக்கும் - இப்பருவத்துக்கு மேற்பட்ட முதுக்குறைவும் இறைபாலன்பும் கண்டு உலகில் எவரும் பெருமிதப்பட்டு வியக்கத்தக்க.
வாரும் அணிய அணிய ஆம் - வார் - கச்சு; வாரும் - மேலாடையே யன்றிக் கச்சும் என்று உம்மை எதிரது தழுவிய எச்சவும்மை; வாரும் அணிய - மேலாடையும் கச்சும் அணியும்படி.
அணியஆம் - பருவ நெருங்கிய - சமீபித்த - நிலையினவாகிய; அணிய ஆம் - முலைகள் - என்று கூட்டுக; வளர் - பூரித்துப் பெருக்கும்.
முலைகள் இடைவருத்தச் சாரும்பதம் - முலைகள் பெருந்து வளர்தலால் அப்பாரம் தாங்க மாட்டாது இடை துவளச் சாரும்; இடை - இடையை; இரண்டனுருபு தொக்கது. "துணைமுலைகள் கொண்டநுசுப் பொதுங்குபதம்" (1721)
உரைப்பார் - உரைப்பாராகி; உரைப்பார் - என்ன - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.